2019-ல் விழுந்து 2022-ல் சீறி எழுந்த அலெக்ஸ் ஹேல்ஸ்!

மார்கன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவரை இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. 
2019-ல் விழுந்து 2022-ல் சீறி எழுந்த அலெக்ஸ் ஹேல்ஸ்!

அலெக்ஸ் ஹேல்ஸை இன்னொரு முறை இங்கிலாந்து அணியில் பார்ப்போம் என எத்தனை பேர் எண்ணியிருப்பார்கள்! இன்று டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேற முக்கியக் காரணமாக உள்ளார்.  5 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 211 ரன்கள். ஸ்டிரைக் ரேட் - 148.59. 10 சிக்ஸர்கள். 

இத்தனைக்கும் இங்கிலாந்து அணி முதலில் வெளியிட்ட டி20 உலகக் கோப்பை அணியில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பான ஹேல்ஸ், கேப்டன் பட்லரை போனில் அழைத்துக் காரணம் கேட்டிருக்கிறார். கோல்ஃப் விளையாடும்போது ஜானி பேர்ஸ்டோவுக்குக் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்து அணியில் மூன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் சேர்க்கப்பட்டார் ஹேல்ஸ். இதெல்லாம் நடக்கும் என்று அவரே எண்ணவில்லை. 

2019 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தும் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார் ஹேல்ஸ். 2022 உலகக் கோப்பை அணியில் முதலில் இடம்பெறாவிட்டாலும் சூழல் அவருக்குச் சாதகமாக அமைந்ததால் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். 

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ், 21 நாள்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

Caption
Caption

கிரிக்கெட் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முறையில் போதை மருந்து பயன்படுத்திய ஹேல்ஸ் மீது 21 நாள்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பரிசோதனையில் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்ததால் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2019 ஜூலை முதல் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரர்களில் 2-ம் இடம் பிடித்தார். எப்படியாவது இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற்று விட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தார். டெஸ்ட் கனவை விட்டொழித்தார். டி20 கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும், இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். 

இங்கிலாந்து அணியில் ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளோம். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம் இங்கிலாந்து வீரர்கள் கவனச் சிதறல்கள் எதுவுமின்றி தங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ஹேல்ஸ் எண்ணக்கூடாது. அவருக்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் ஈசிபி நிர்வாகம் வழங்கும் என்று தடை விதிக்கப்பட்ட சமயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) நிர்வாக இயக்குநர் கூறினார். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அணியில் மீண்டும் ஹேல்ஸைச் சேர்ப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. விதிமுறைகளை மீறியதால் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அணிக்குச் சங்கடம் ஏற்படுத்தி விட்டார் என ஹேல்ஸ் மீது வருத்தத்தில் இருந்தார் கேப்டன் இயன் மார்கன். 

2020-ம் வருடம் மே மாதம் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ஆதரவாகப் பேசினார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். ஹேல்ஸின் தடை பற்றி அவர் கூறியதாவது: அவர் ஒரு குற்றம் செய்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து, உலகக் கோப்பை வெற்றியையும் தவறவிட்டுவிட்டார். லார்ட்ஸ் மைதானத்தின் சிறந்த நாள் அவருக்கு அமையவில்லை. இந்த விலை போதாதா? இதற்கு மேலும் தான் செய்த தவறுக்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் இருக்கக்கூடாது. அவருக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் எப்படி விளையாட முடியும்? அவரிடம் இந்தளவுக்குக் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்றார். எனினும் இயன் மார்கன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவரை இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. 

மார்கனின் ஓய்வுக்குப் பிறகு பட்லர் கேப்டன் ஆனார். எல்லாமே மாறிவிட்டது. இங்கிலாந்து அணியில் விளையாட ஹேல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அணி வீரர்களுடன் கலந்தாலோசித்தோம். ஹேல்ஸ் அணியில் இருப்பதில் யாருக்கும் பிரச்னை இல்லை என்று தெரிந்த பிறகு அவர் சேர்க்கப்பட்டார் எனப் பேட்டியளித்தார் பட்லர். ஆஸ்திரேலியாவில் பிபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்திருந்ததால் ஹேல்ஸின் தேர்வு இயல்பாகி விட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் விளையாடி 9 இன்னிங்ஸில் 2 அரை சதங்கள் எடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குள் நுழைந்தார் ஹேல்ஸ். 2019 உலகக் கோப்பையில் தவறவிட்டதை 2022 உலகக் கோப்பையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.

நான் மீண்டும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவேன் என நினைக்கவில்லை. இன்று என் வாழ்வின் முக்கியமான நாள் என்றார் ஹேல்ஸ், இந்தியாவை வீழ்த்திய பிறகு. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கடைசி 3 ஆட்டங்களில் 52, 47, 86* எனச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளார். இறுதிச்சுற்றில் இன்னும் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றால் அது எவ்வளவு பெரிய சாதனையாக, உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com