தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயமா?

தமிழக அணியில் நடராஜன் இடம்பெறாதது பற்றி தமிழக அணியின் பயிற்சியாளர் என். வெங்கடரமணா பதிலளித்துள்ளார்.
தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயமா?

விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணியில் நடராஜன் இடம்பெறாதது பற்றி தமிழக அணியின் பயிற்சியாளர் என். வெங்கடரமணா பதிலளித்துள்ளார்.

விஜய் ஹசாரே போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இப்போட்டிக்கான தமிழக அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெற்றிருந்தார். இதன்பிறகு, காயமடைந்துள்ள நடராஜனுக்குப் பதிலாக எம். முகமது தமிழக அணியில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

2020-ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஊரே வியக்கும்படி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் அறிமுகமானபோதே நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு 2021 ஏப்ரல் மாத இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த வருட ஐபிஎல் போட்டியின்போது நடராஜனுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் 11 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். 

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடிய 31 வயது நடராஜன், 5 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் விஜய் ஹசாரே போட்டியிலிருந்து நடராஜன் விலகியது குறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் வெங்கடரமணா, ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடராஜனுக்குக் காயம் ஏற்படவில்லை. வங்கதேசம் லெவன் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியபோது அசெளகரியமாக உணர்ந்தார். 2021-ல் ஏற்பட்ட அதே முழங்கால் பிரச்னை தான். எனவே அதற்கான சிகிச்சை எடுத்து தேறி வருவதற்காக இப்போட்டியில் விளையாடவில்லை. எப்போது மீண்டும் விளையாட வருவார் எனத் தெரியவில்லை என்றார். 

இந்திய அணிக்காக இதுவரை 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் நடராஜன் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com