விஜய் ஹசாரே: ஷாருக் கானிடம் மாற்றம் வருமா?

இந்திய அணிக்குக் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரரின் தேவை எப்போதும் இருக்கும்.
விஜய் ஹசாரே: ஷாருக் கானிடம் மாற்றம் வருமா?

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்குப் பிறகு விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியிலும் திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக் கான் இந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஷாருக் கான் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டி20, ஒருநாள், ரஞ்சி கோப்பை என அனைத்திலும் சிறப்பாக விளையாடியதால் உண்டான ஆர்வம் இது. சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். எனினும் 11 பேரில் ஒருவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐபிஎல் 2022 ஏலத்தில் ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் ஷாருக் கான். பிறகு இந்திய அணிக்குத் தேர்வானதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தினார். கடைசியில் ஏலத்தில் பஞ்சாப் அணி ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. தேசிய அணியில் இடம்பெறாத வீரர்களில் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களில் ஷாருக் கானுக்கு 2-ம் இடம் கிடைத்தது. (அவேஷ் கான் ரூ. 10 கோடிக்குத் தேர்வானார்.)

ஐபிஎல் 2022 போட்டியில் 8 ஆட்டங்களில் 117 ரன்கள், 19 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 108.33. இதற்காகவா இவரைத் தேர்வு செய்தோம் என பஞ்சாப் அணி நொந்துகொள்ளும் அளவுக்கு விளையாடினார். இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் ஷாருக் கான் ஏமாற்றினார். 5 இன்னிங்ஸில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் -  93.75. லக்னெள ஆடுகளம் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போனாலும் ஷாருக் கானின் திறமைக்கு இது சரியல்ல. அதற்குப் பிறகு சென்னைக்கு வந்து விளையாடிய வங்கதேச அணிக்கு எதிராக 69 பந்துகளில் சதமடித்தார் ஷாருக் கான். இதுதான் அவர் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று முதல் தொடங்கியுள்ள விஜய் ஹசாரே போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் காண்பித்தால் ஐபிஎல் போட்டியிலும் அவர் மீது நம்பிக்கை வைத்துக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். 

இந்திய அணிக்குக் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரரின் தேவை எப்போதும் இருக்கும். அதனால் தினேஷ் கார்த்திக்குக்குப் பிறகு அவருடைய இடத்தைப் பெறும் வீரராக ஷாருக் கான் மாற வேண்டும். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி அவரைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும். இந்திய அணியில் அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் நடக்கப் போகின்றன. புதிய வீரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஷாருக் கான் புதிய அத்தியாயத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com