கடைசி ஓவரை வீச இந்திய பந்துவீச்சாளர்கள் பயந்தார்கள்: சோயிப் மாலிக்
By DIN | Published On : 16th November 2022 01:51 PM | Last Updated : 16th November 2022 01:51 PM | அ+அ அ- |

தோனியுடன் சோயிப் மாலிக்
2007 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி ஓவரை வீச இந்தியப் பந்துவீச்சாளர்கள் பயந்தார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி. ஜொகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்தார். இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஒரு பேட்டியில் கூறியதாவது:
பெயர்களை நான் கூற மாட்டேன். எல்லா இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கும் ஒரு ஓவர் மீதமிருந்தது. தோனி அனைவரிடமும் கேட்டார். ஆனால் கடைசி ஓவரை வீச அவர்கள் மறுத்து விட்டார்கள். மிஸ்பா உல் ஹக்குக்குப் பந்துவீச அவர்கள் பயந்தார்கள். மிஸ்பா அப்போது மைதானத்தின் எல்லாப் பக்கங்களிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்திருந்தார். மிஸ்பா அடித்த ஸ்கூப் ஷாட் பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள். அது கடைசி விக்கெட்டாக இல்லாமல் இருந்திருந்தால் பந்தைக் கீழாக அடித்திருப்பார். அந்த ஓவரில் ஏற்கெனவே ஜொகிந்தர் சர்மா பந்தில் சிக்ஸர் அடித்திருந்தார் என்றார்.