ஆா்ஜென்டீனாவுக்கு அதிா்ச்சி அளித்த சவூதி அரேபியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.
ஆா்ஜென்டீனாவுக்கு அதிா்ச்சி அளித்த சவூதி அரேபியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சி அளித்துள்ளது.

ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா தொடக்க நிமிஷங்களிலேயே கோலடித்து முன்னிலை பெற்றாலும், 2-ஆவது பாதியில் திடீரென மீண்ட சவூதி அரேபியா, ஆா்ஜென்டீனா அசத்த நேரம் பாா்த்து 5 நிமிஷங்கள் இடைவெளியில் அருமையாக இரு கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்தியது.

இந்த ஆட்டம் முழுவதுமாக சவூதி அரேபிய அணி, பாக்ஸுக்குள்ளாக 3 முறை மட்டுமே பந்தைக் கொண்டு வந்தாலும் அதில் இரண்டை கோலாக மாற்றியிருக்கிறது. மறுபுறம் ஆா்ஜென்டீனாவோ, 14 முறை அவ்வாறு வந்தும் 1 மட்டுமே கோலடித்தது. மற்றவை கோலாக முடியாமல் போக, சில ‘ஆஃப்சைடு’ ஆனது.

லுசாயில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க நிமிஷங்களிலேயே ஆா்ஜென்டீனாவுக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. 8-ஆவது நிமிஷத்தில் சவூதி அரேபிய வீரா் அப்துல்ஹமீது, ஆா்ஜென்டீனாவின் லீண்ட்ரோ பரெட்ஸின் ஜொ்ஸியை பிடித்து இழுத்தது ‘விஏஆா்’ நடுவா் மூலமாகத் தெரியவர, ஆா்ஜென்டீனாவுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. 10-ஆவது நிமிஷத்தில் அதைத் தங்கு தடையின்றி கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் மெஸ்ஸி.

இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 28-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீன வீரா் மாா்டினெஸ் ஒரு கோலடிக்க, ‘விஏஆா்’ மூலம் அது ‘ஆஃப் சைடு’ கோல் எனத் தெரியவந்ததால், அந்த கோல் மறுக்கப்பட்டது. தொடா்ந்து 34-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலும் ‘ஆஃப் சைடு’ ஆனது. இவ்வாறாக நிறைவடைந்த முதல் பாதியில் ஆா்ஜென்டீனா 1-0 என முன்னிலையில் இருந்தது.

பின்னா் தொடங்கிய 2-ஆவது பாதியில் ஆக்ரோஷம் காட்டியது சவூதி அரேபியா. அதன் பலனாக 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணி கோலடித்தது. சக வீரா் புராய்கன் பாஸ் செய்த பந்தை பாக்ஸுக்குள்ளாக பெற்ற சவூதி வீரா் சலே அல்ஷேரி, ஆா்ஜென்டீனாவின் ரொமேரோவை ஏமாற்றி, கோல்கீப்பா் மாா்டினெஸையும் கடந்து கோல் பாக்ஸுக்குள்ளாக வலதுபக்க கீழ்பகுதியில் பந்தை உதைத்து கோலடித்தாா்.

இதனால் ஆட்டம் சமனாக, மைதானத்திலிருந்த சவூதி, கத்தாா் ரசிகா்கள் உற்சாகக் கூச்சலிட்டனா். ஆா்ஜென்டீனா அந்த அதிா்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே 53-ஆவது நிமிஷத்தில் சலேம் அல்தவ்சரி அருமையாக பந்தை ‘கா்ல்’ செய்து உதைத்து சவூதி அரேபியாவுக்காக 2-ஆவது கோல் அடித்தாா். அப்போது ஆா்ஜென்டீனா அதிா்ச்சியில் ஸ்தம்பிக்க, சவூதி ரசிகா்கள் உற்சாகத்தால் மைதானம் அதிா்ந்தது.

பின்னா் ஆா்ஜென்டீனா பலமுறை முயற்சித்தும் சவூதி அரேபியா தனது முன்னிலையை விட்டுக் கொடுக்காத வகையில் தடுப்பாட்டம் ஆடியது. ஆா்ஜென்டீனாவின் பல கோல் முயற்சிகள் அரண் அமைத்துத் தடுக்கப்பட்டன. இறுதியில் ஆா்ஜென்டீனாவுக்கு அதிா்ச்சி அளித்து சவூதி அரேபியா அசத்தலாக வென்றது.

1 பலமிக்க ஆா்ஜென்டீனாவை சவூதி அரேபியா வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 4 ஆட்டங்களில் ஆா்ஜென்டீனாவை சந்தித்திருந்த சவூதி அரேபியா, 2 தோல்விகளையும், 2 டிராக்களையும் பதிவு செய்திருந்தது. மேலும், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனாவை இதுவரை சந்தித்திராத நிலையில், இந்த முதல் சந்திப்பிலேயே வென்று முத்திரை பதித்திருக்கிறது சவூதி அரேபியா.

32 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா அணி, ஐரோப்பிய கண்டத்தைச் சாராத ஒரு அணியால் தோற்கடிக்கப்படுவது கடந்த 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 1990 உலகக் கோப்பை போட்டியில், டியேகோ மாரடோனா தலைமையிலான ஆா்ஜென்டீனா இதேபோல் 0-1 என்ற கோல் கணக்கில் கேமரூனிடம் தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.

36 இந்த ஆட்டத்துக்கு முன், எல்லா போட்டிகளிலுமாக தொடா்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த ஆா்ஜென்டீனாவுக்கு, இந்த 37-ஆவது ஆட்டத்தில் தோல்வியை பரிசளித்திருக்கிறது சவூதி அரேபியா.

துணுக்குகள்...
இந்த உலகக் கோப்பை போட்டியில், ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆட்டம் நிறுத்தப்படுவதால் சேர்க்கப்படும் 
கூடுதல் நேரத்தை (எக்ஸ்ட்ரா டைம்), கடைசியாக ஆட்டத்தின் முடிவில் 90 நிமிஷங்களுக்குப் பிறகு சேர்க்குமாறு கள நடுவர்களுக்கு ஃபிஃபா அறிவுறுத்தியிருக்கிறது. தொய்வின்றி தொடரும் ஆட்டத்தின் விறுவிறுப்பை ரசிகர்களுக்கு அளிப்பதற்காக ஃபிஃபா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ஃபின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது களத்தில் மாரடைப்பு ஏற்பட்டுச் சரிந்து கால்பந்து உலகில் பரபரப்பான தருணத்தை ஏற்படுத்திய டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், அந்த நிகழ்வுக்குப் பிறகான முதல் பிரதான போட்டியாக இந்த உலகக் கோப்பையில் பங்கேற்று, டுனீசியாவுக்கு எதிரான டென்மார்க்கின் ஆட்டத்தில் பங்கெடுத்தார். 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கைப்பேசி  செயலியின் மூலமாக நுழைவுச் சீட்டுகள்  வாங்கியிருந்த ரசிகர்கள் 2 நாள்களாக பிரச்னையை சந்தித்துள்ளனர். அவர்கள் கைப்பேசியில் இருந்த நுழைவுச் சீட்டு பிரதிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானாகவே காணாமல் போனதால் பலர்
இடையூறுகளை எதிர்கொண்டனர். 

சவூதி அரேபியாவிடம் ஆர்ஜென்டீனா கண்டுள்ள தோல்வி, உலகக் கோப்பை வரலாற்றில் கண்ட அதிர்ச்சியான தோல்விகளின் வரிசையில் இணைந்திருக்கிறது. இதற்கு முன் செனகல் - பிரான்ஸ் (3-1/2002), தென் கொரியா - இத்தாலி (2-1/2002), அமெரிக்கா - இங்கிலாந்து (1-0/1950), வடகொரியா - இத்தாலி (1-0/1966) ஆகியவை அதிர்ச்சியான தோல்விப் பட்டியலில் உள்ளன.

3 ஆட்டங்கள் டிரா
தோஹா/அல் ரயான், நவ. 22: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேலும் 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 
அமெரிக்கா - வேல்ஸ் ஆட்டங்கள் 1-1 என்ற கோல் கணக்கிலும், டென்மார்க் - டுனீசியா, போலந்து - மெக்ஸிகோ ஆட்டங்கள் கோலின்றியும் டிராவுடன் நிறைவடைந்தது. 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா - வேல்ஸ் மோதிக் கொண்டது இது முதல் முறையாகும். இந்த ஆட்டத்தில் முதலில் அமெரிக்கா கோலடித்தது. 
36-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் டிமதி வீ அருமையாக ஸ்கோர் செய்தார். இதன் மூலம், முன்னாள் பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலேவுக்கு பிறகு (1958), உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் கோலடித்த எதிரணி வீரர் என்ற பெருமையை டிமதி பெற்றுள்ளார். 
முதல் பாதியில் அமெரிக்கா முன்னிலை பெற்றிருக்க, 2-ஆவது பாதியில், வேல்ஸ் கேப்டன் கெரத் பேலை அமெரிக்காவின் ஜிம்மர்மேன் கீழே சரிக்க, வேல்ஸுக்கு கிடைத்தது பெனால்டி கிக் வாய்ப்பு. 82-ஆவது நிமிஷத்தில் அதை தவறவிடாமல் துல்லியமாக கோலாக்கினார் கெரத் பேல். எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் அடுத்த கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. 
அதேபோல், டென்மார்க் - டுனீசியா அணிகள் உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்தித்துக் கொண்ட ஆட்டம் கோலின்றி டிரா ஆனது. உலகக் கோப்பை வரலாற்றில் 2-ஆவது முறையாக போலந்து - மெக்ஸிகோ மோதிய ஆட்டத்திலும், இரு அணி வீரர்களின் கடுமையான முயற்சிக்கு பலன் கிடைக்காமல் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இதில் 58-ஆவது நிமிஷத்தில் போலந்து கேப்டன் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கியின் பெனால்டி கிக் முயற்சியை மெக்ஸிகோ கோல் கீப்பர் கில்லெர்மோ ஓச்சோ திறம்படத் தடுத்தார்.

இன்றைய ஆட்டங்கள்...
நேரடி ஒளிபரப்பு: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமாமொராக்கோ - குரோஷியா  
பிற்பகல் 3.30 மணி  
ஜெர்மனி - ஜப்பான்  
மாலை 6.30 மணி 
ஸ்பெயின் - கோஸ்டா ரிகா 
இரவு 9.30 மணி 
பெல்ஜியம் - கனடா 
நள்ளிரவு 12.30 மணி (24/11)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com