மகளிர் ஆசியக் கோப்பை: தாய்லாந்தை நொறுக்கியது இந்தியா

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் தாய்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 
தீப்தி சர்மா (கோப்புப் படம்)
தீப்தி சர்மா (கோப்புப் படம்)

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் தாய்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வென்றது. 4-வது ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்தது. எனினும் அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. பாகிஸ்தானைத் தோற்கடித்த அணி தாய்லாந்து என்பதால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்திய அணி தாய்லாந்தை நொறுக்கி லீக் சுற்றை நிறைவு செய்தது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதியை உறுதி செய்துள்ளன. இன்றைய ஆட்டத்தில் மந்தனா கேப்டனாகச் செயல்பட்டார். இது அவருடைய 100-வது சர்வதேச டி20 ஆட்டம். 

முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி 15.1 ஓவர்களில் 37 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்னேக் ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, ராஜேஸ்வரி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தொடக்க வீராங்கனை தவிர அனைத்து தாய்லாந்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இந்திய மகளிர் அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி, 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com