ஆசியக் கோப்பை: ரோஹித் சர்மாவின் தவறுகளும் இந்திய அணியில் நிலவும் குழப்பங்களும்!

ரோஹித் சர்மா - டிராவிட் கூட்டணி ஆசியக் கோப்பைப் போட்டியில் இதுவரை செய்த தவறுகள் என்ன...
ஆசியக் கோப்பை: ரோஹித் சர்மாவின் தவறுகளும் இந்திய அணியில் நிலவும் குழப்பங்களும்!

முதலில் பாகிஸ்தானிடம் அடுத்ததாக இலங்கையிடம் என சூப்பர் 4 சுற்றில் விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்று, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். மதுஷங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 52 ரன்களும் குசால் மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 விக்கெட்டுகளும் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வீழ்த்தி விட்டால் இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். இறுதிச்சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் விளையாடிய விதம், அணித்தேர்வு எனப் பல விஷயங்களில் இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். 

ரோஹித் சர்மா - டிராவிட் கூட்டணி ஆசியக் கோப்பைப் போட்டியில் இதுவரை செய்த தவறுகள் என்ன, இந்திய அணியில் நீடிக்கும் குழப்பங்கள் என்ன... பார்க்கலாம்.

1. தொடக்க வீரராக விளையாடும் ராகுல் அணிக்கு உபயோகமாக இருக்கிறாரா என்பது எல்லோருக்கும் குழப்பமாக உள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த ராகுலால் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதேசமயம் இதைவைத்து அவரை வெளியேற்றவும் முடியாது. அவருக்கும் அளிக்கும் வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக் கொண்டால் ரோஹித் சர்மாவின் பாரம் குறையும். 

2. விராட் கோலி ஆசியக் கோப்பைப் போட்டியில் நன்கு விளையாடி வருகிறார். ஒரு பிரச்னை தீர்ந்தது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் எடுத்தவுடன் சவால் விடுப்பது போல பேட்டியளிப்பது, சமூகவலைத்தளங்களின் வழியாக கருத்தை வெளிப்படுத்துவது என கவனம் சிதறுவதாக உள்ளது அவருடைய நடவடிக்கைகள். ஒரு முக்கியமான போட்டி முடியும் வரை பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முடியுமா கோலி?

3. இந்திய அணியின் மேல் வரிசை, நடுவரிசையில் இடக்கை பேட்டர்கள் இல்லாதது பெரிய குறையாகவும் குழப்பம் விளைவிப்பதாகவும் உள்ளது. எல்லா பேட்டர்களும் வலது கை பேட்டர்களாக உள்ளதால ஜடேஜா 4-ம் நிலை வீரராகக் களமிறக்கப்பட்டார். அவருக்குப் பிறகு ரிஷப் பந்துக்கு அந்தப் பொறுப்பு வந்துள்ளது. இஷான் கிஷன் நன்றாக விளையாடியிருந்தால் இந்தக் குழப்பங்கள் நேர்ந்திருக்காது.

4. ரிஷப் பந்துக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க இந்திய அணி தயாராக உள்ளது. ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல அவர் விளையாடுவதில்லை. இதுவரை 57 டி20 ஆட்டங்களில் விளையாடிய ரிஷப் பந்தின் ஸ்டிரைக் ரேட் - 126.24 தான். ஒரு இடக்கை பேட்டர் தேவை என்பதால் மட்டுமே ரிஷப் பந்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இடக்கை பேட்டர் நவாஸ் எப்படி விளையாடினாரோ அப்படியொரு பங்களிப்பையே ரிஷப் பந்திடமிருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. 

5. ரிஷப் பந்தை அணியில் சேர்ப்பதால் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் கடைசி ஓவர்களில் நினைத்த ரன்களை இந்திய அணியால் கடைசி இரு ஆட்டங்களில் எடுக்க முடியவில்லை. ரோஹித் சர்மாவுக்கு இது பெரிய பாடமாக அமைந்துள்ளது. கடைசி ஓவர்களில் தோனி, பாண்டியா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக் போல எல்லோராலும் விளையாடி விட முடியாது என்பதற்குக் கடைசி இரு ஆட்டங்கள் உதாரணமாக அமைந்துள்ளன. 

6. தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றி தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்குவதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு ஓவர்களை எப்படியும் தீபக் ஹூடா வீசுவார் என்று சொல்லப்பட்டாலும் அந்த முயற்சியையும் ரோஹித் எடுக்கவில்லை. கடைசி ஓவர்களில் ஹூடாவும் அதிரடியாக விளையாடவும் முடிவதில்லை. ஒரு குழப்பமான வீரராக ஹூடா இரண்டு ஆட்டங்களிலும் காணப்பட்டார்.

7. ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்திய அணி விளையாடுவது சாதகமான முடிவுகளைத் தரவில்லை. அக்‌ஷர் படேலை அணியில் சேர்த்தால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பாரே என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

8. சஹால் திடீர் திடீரென ஏமாற்றி விடுகிறார். இதனால் சஹாலை எல்லா ஆட்டங்களிலும் நம்ப முடிவதில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் சஹால் இடம்பிடிப்பார் என்றாலும் அவர் அணிக்கு எப்போதும் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும். திடீர் திடீரென காலை வாரக்கூடாது.

9. பாகிஸ்தானுக்கு எதிராக அற்புதமாகப் பந்துவீசினார் பிஸ்னோய். ஆனால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. காரணம், இலங்கை அணியில் நிறைய இடக்கை பேட்டர்கள் இருந்தது தான். இதனால் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த மூவருமே உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார்களா? அக்‌ஷர் படேல், ஜடேஜா, சஹால் ஆகியோருக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டால் அஸ்வின், பிஸ்னோய்க்கு வாய்ப்பு கிடைக்காது. 

10. பும்ரா இல்லாத குறையைக் கடைசி ஓவர்களில் தீர்த்து வைத்துள்ளார் அர்ஷ்தீப் சிங். ஆனால் திடீரென மோசமாக வீச ஆரம்பித்துள்ளார் புவனேஸ்வர் குமார். பும்ரா மீண்டும் விளையாட வந்துவிட்டால் இந்தக் குறை சரியாகிவிடுமா? புவனேஸ்வரின் மோசமான பந்துவீச்சு இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.  

11. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு ஆறு பந்துவீச்சாளர்கள் தேவை. இதனால் பாண்டியா இல்லாமல் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் இரு சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெற வேண்டும். ஆசியக் கோப்பைப் போட்டியில் அப்படியொரு அணியை ரோஹித் சர்மா தேர்வு செய்யாததால் தான் இரு தோல்விகள் கிடைத்துள்ளன. 

12. ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், ஷிகர் தவன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திரிபாதி, திலக் வர்மா போன்றோர் இந்திய அணியில் இல்லை. இதனால் அணியில் இடம்பெற்றுள்ள பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். நடு ஓவர்களில் (6-15) இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர்கள் சரியாக அமையவில்லை. இந்தக் குறையை சரிசெய்யா விட்டால் டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி தடுமாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com