என்ன செய்யப் போகிறது இந்திய அணி?: டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பந்த்!

2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடிய பந்த், 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
என்ன செய்யப் போகிறது இந்திய அணி?: டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பந்த்!

டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் மோசமாக விளையாடி வருவது மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் எப்படித் தோல்வியடைய முடியும்?

புள்ளிவிவரங்கள் அப்படித்தான் சொல்கின்றன.

2019 செப்டம்பர் முதல் கடந்த மூன்று வருடங்களில்  85 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் ஒருமுறை மட்டுமே ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இதுபோல இன்னும் இருவர் உள்ளார்கள். அவ்வளவுதான். இது ஒரு துளி உதாரணம்.

செப்டம்பர் 2019க்கு முன்பு ரிஷப் பந்த் இப்படி விளையாடவில்லை. அதற்கு முந்தைய இரு வருடங்களில் (செப். 2017 முதல் செப். 2019 வரை) டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் பேட்டிங் சராசரி - 38.37. ஸ்டிரைக் ரேட் - 166. இந்த ரிஷப் பந்த் எங்கே போனார்? 

வைட் ஆஃப் ஸ்டம்ப் பக்கம் பந்துவீசு, இல்லாவிட்டால் பந்தின் வேகத்தைக் குறைத்து விடு. ரிஷப் பந்தால் எளிதில் ரன்கள் எடுக்க முடியாது. இந்த உத்தியைப் பந்துவீச்சாளர்கள் பலரும் தெரிந்து வைத்திருப்பதால் நேரும் சிக்கல் இது. தனது பலவீனத்தைச் சரிசெய்துகொள்ள அவர் முயலவில்லை. இதனால் சிக்கல் தொடர்கிறது. 

கடந்த மூன்று வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் பேட்டிங் மிகவும் சுமாராகி விட்டது. செப்டம்பர் 2019 முதல் 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 127.39 ஸ்டிரைக் ரேட் தான் வைத்துள்ளார். சராசரியும் கிட்டத்தட்ட 29. இது போதுமா? 

இந்தக் காலக்கட்டத்தில் 1000 பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்களில் மோசமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்களில் 19-வது இடம் ரிஷப் பந்த். அவரை விடவும் 90 வீரர்கள் வேகமாக ரன்கள் எடுத்துள்ளார்கள். 

78 இன்னிங்ஸில் 20 இன்னிங்ஸில் மட்டும் தான் 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். இது போதுமா? 

ஐபிஎல் போட்டியில் 2020, 2021-ல் ரிஷப் பந்தின் ஸ்டிரைக் ரேட் 113.95, 128.52. ஆனால் இந்த வருடம் முதல்முறையாக ஒரு அரை சதமும் எடுக்காமல் போனாலும் 151.79 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். 14 இன்னிங்ஸில் 340 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருவிதமான கலவையான ஆட்டம். 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 57 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 126.24. 3 அரை சதங்கள். குறைவான ஸ்டிரைக் ரேட் தான் இந்திய அணிக்குச் சிக்கலாக உள்ளது. 

2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடிய பந்த், 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 124.00. ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை. இடக்கை பேட்டர் தேவை என்பதற்காக இந்திய அணி ரிஷப் பந்துக்குத் தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறது. இதற்காக தினேஷ் கார்த்திக்கையும் அணியை விட்டு நீக்கியுள்ளது. ஆனால் அணியின் திட்டங்களுக்கு ஈடுகொடுக்க மறுக்கிறார் பந்த்.

நடு ஓவர்களில் ஒரு இடக்கை பேட்டர் விளையாட வேண்டும் என எண்ணினோம். அதனால் தான் தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்பட்டார். மற்றபடி தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடவில்லை போன்ற காரணம் எதுவும் இதற்கு இல்லை. அழுத்தத்தை விடுவிக்க இடக்கை பேட்டர் நடு ஓவர்களில் விளையாடினால் சரியாக இருக்கும் என எண்ணினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்கள் அணியில் நெகிழ்தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எதிரணிக்கு ஏற்றாற்போல அணியில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். நான்கு, ஐந்து பேட்டர்கள் எப்போதும் விளையாடுவார்கள். பேட்டிங்கில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்று ரிஷப் பந்தை அணியில் சேர்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரோஹித் சர்மா. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இடக்கை பேட்டர் நவாஸ் எப்படி விளையாடினாரோ அப்படியொரு பங்களிப்பையே ரிஷப் பந்திடமிருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. ரிஷப் பந்தை அணியில் சேர்ப்பதால் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் கடைசி ஓவர்களில் நினைத்த ரன்களை இந்திய அணியால் கடைசி இரு ஆட்டங்களில் எடுக்க முடியவில்லை. ரோஹித் சர்மாவுக்கு இது பெரிய பாடமாக அமைந்துள்ளது.

தற்போது, ரிஷப் பந்தை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறது இந்திய அணி. இந்தளவுக்குக் கஷ்டம் தராமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com