ஸ்மித், வார்னர் கேப்டன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை: ஆரோன் ஃபிஞ்ச்

கேப்டவுன் டெஸ்ட் விவகாரம் தடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
ஸ்மித், வார்னர் கேப்டன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை: ஆரோன் ஃபிஞ்ச்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஆஸி. அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், அடுத்த கேப்டன் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். 35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

தனக்கு அடுத்ததாக ஆஸி. ஒருநாள் அணியின் கேப்டனாகும் தகுதி ஸ்மித், வார்னர் ஆகிய இருவரிடமும் உள்ளதாக ஃபிஞ்ச் கூறியுள்ளார். கேப்டவுன் டெஸ்ட் சம்பவம் இதற்குத் தடையாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 

2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் பந்தைச் சேதப்படுத்த முயன்றது தொடர்பான குற்றச்சாட்டை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. வார்னர் கேப்டனாவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆஸி. ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பற்றி ஃபிஞ்ச் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஸ்மித் மீண்டும் ஆஸி. அணியின் கேப்டன் ஆவதில் கேப்டவுன் டெஸ்ட் விவகாரம் தடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டபோது அடிலெய்ட் ஆஷஸ் டெஸ்டில் கேப்டனாகச் செயல்பட்டார் ஸ்மித். எனவே பழைய விஷயங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. வார்னர் கேப்டனாகச் செயல்பட்டபோது சில ஆட்டங்களில் அவருடன் விளையாடினேன். ஆஸி. அணியின்  கேப்டனாவதற்கான வாழ்நாள் தடையை வார்னர் எதிர்கொண்டுள்ளார். இது நீக்கப்பட வேண்டும். ஒரு வீரராக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் அவரால் செயல்பட முடியும். இது முக்கியமானது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com