இன்று இந்தியா - ஜப்பான் அரையிறுதியில் மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா - ஜப்பான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா - ஜப்பான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
அதே நாளில் மற்றொரு அரையிறுதியில் மலேசியா - நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் களம் காண, 5/6-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா சந்தித்துக்கொள்கின்றன.
7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ரவுண்ட் ராபின் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 3 முறை சாம்பியனான பாகிஸ்தான், சீனா அதற்கு தகுதிபெறத் தவறின.
அடுத்தகட்டமாக, போட்டியின் 6-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, ஜப்பானை சந்திக்கிறது. ஏற்கெனவே இரு அணிகளும் ரவுண்ட் ராபின் சுற்றில் சந்தித்த ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
அந்த சுற்றில் தோல்வியே காணாத ஒரே அணியாக இருக்கும் இந்தியா, அதில் தோற்கடிக்க முடியாத ஒரே அணி என்றால் அது ஜப்பான் மட்டும்தான். எனவே, இந்த அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக தகுந்த வெற்றியை பதிவு செய்து இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.
போட்டியில் இதுவரை அதிகபட்சமாக 20 கோல்கள் அடித்திருக்கும் இந்தியா, ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் தடுமாறியது. அந்த ஆட்டத்தில் 15 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் ஒன்றில் மட்டுமே கோலடித்தது.
எனவே, இந்த ஆட்டத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளை சிறப்பாக கையாள்வதுடன், 60 நிமிஷங்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே பிரதான நோக்கம் என இந்திய பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.
தரவரிசை அடிப்படையில் இந்தியா (4), ஜப்பான் (19) இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும், ஜப்பானை எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. கடந்த 2021 எடிஷனில் இந்த ஜப்பான் அணியை குரூப் சுற்றில் 6-0 கோல் கணக்கில் தோற்கடித்த இந்தியா, அரையிறுதியில் அதே அணியிடம் 3-5 என அதிா்ச்சித் தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.
இன்றைய ஆட்டங்கள்
பாகிஸ்தான் - சீனா (பிற்பகல் 3.30 மணி)
மலேசியா - தென் கொரியா (மாலை 6 மணி)
இந்தியா - ஜப்பான் (இரவு 8.30 மணி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...