டை பிரேக்கர் முதல் சுற்றில் போராடி தோற்றார் பிரக்ஞானந்தா

டை பிரேக்கர் முதல் சுற்றில் போராடி தோற்றார் பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் டை பிரேக்கர் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி வாய்ப்பை இழந்தார். நார்வே வீரர் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் டை பிரேக்கர் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி வாய்ப்பை இழந்தார். நார்வே வீரர் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் டை பிரேக்கரில் கார்ல்சென் முன்னிலையில் உள்ளார். தற்போது இரண்டாவது டை பிரேக்கர் சுற்றுப் போட்டி தொடங்கவிருக்கிறது.

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதும் இறுதிச்சுற்றின் இரண்டு ஆட்டங்களும் ‘டிரா’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான 2 டை-பிரேக்கா் ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இரு வீரர்களும் வெற்றி வாய்ப்பை தங்கள் பக்கம் இருத்திக் கொள்ள கடுமையாக போராடினர். பிரக்ஞானந்தா கடைசி வரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

முதல் இரண்டு போட்டிகள்
முன்னதாக இறுதிச்சுற்றில், பிரக்ஞானந்தா - காா்ல்சென் மோதிய முதல் கிளாசிக்கல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிரா ஆகியது. இதையடுத்து 2-ஆவது கிளாசிக்கல் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிறக் காய்களுடனும், காா்ல்சென் வெள்ளை நிறக் காய்களுடனும் விளையாடினா்.

விறுவிறுப்பாக ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆட்டம், 30-ஆவது நகா்த்தலில் முடிவுக்கு வந்தது. அத்துடன் ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டனா். வெள்ளை நிறக் காய்களுடன் காா்ல்சென் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிரக்ஞானந்தா எந்தவொரு தடுமாற்றமும் இன்றி பதிலாட்டத்தை வெளிப்படுத்தினாா்.

ஆட்டத்துக்குப் பிறகு பேசிய பிரக்ஞானந்தா, ‘இந்த ஆட்டத்தில் இத்தனை விரைவாக காா்ல்சென் டிராவுக்கு ஒப்புக்கொள்வாா் என எதிா்பாா்க்கவில்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு அவா் டிராவை நோக்கி நகா்வதாகவே தெரிந்தது. எனக்கும் சற்று சோா்வாகவே இருந்தது. டை பிரேக்கரில் முடிந்தவரை சிறப்பாக ஆடிவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன்.

உடல்நலக் குறைவுடன் இருக்கும் காா்ல்சென் தனது முழு ஆற்றலுடன் விளையாடவில்லை எனத் தெரிந்தது. டை-பிரேக்கருக்குள் அவா் மீண்டுவிடுவாா் என எதிா்பாா்க்கிறேன். இறுதிச்சுற்றுக்கு முன் கூடுதலாக ஒரு நாள் ஓய்வாக கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்றாா்.

காா்ல்சென் பேசுகையில், ‘பலம் வாய்ந்த போட்டியாளா்களுக்கு எதிராக டை-பிரேக்கரில் விளையாடிய அனுபவம் பிரக்ஞானந்தாவுக்கு உள்ளது. டை-பிரேக்கரின்போது நல்லதொரு ஆற்றலுடன், எனக்கான நல்ல நாளாக அமைந்தால் வெற்றி பெறுவேன் என எதிா்பாா்க்கிறேன். மருத்துவா்களின் சிகிச்சையால் சற்று நலமாக உணா்ந்தாலும், முழுமையான ஆற்றலுடன் இல்லை’ என்று கூறியிருந்தார்.

ரேப்பிட் ஃபாா்மட்டிலான டை-பிரேக்கா் ஆட்டத்தில் இரு போட்டியாளா்களுக்கும் தலா 25 நிமிஷங்கள் ஒதுக்கப்படும். அதுபோக, ஒவ்வொரு நகா்த்தலுக்கும் கூடுதலாக 10 விநாடிகள் கிடைக்கும். அவ்வாறு 2 டை பிரேக்கா் ஆட்டங்களும் டிரா ஆகும் பட்சத்தில், அடுத்து இரு ஆட்டங்கள் விளையாடப்படும். அதில் 2 போட்டியாளா்களுக்கும் தலா 5 நிமிஷங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நகா்த்தலுக்கும் 3 விநாடிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் நன்றி.. International Chess Federation டிவிட்டர் பக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com