பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்
பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: நான் எனது பத்மஸ்ரீ விருதை பிரதமருக்கு திருப்பியளிக்கிறேன். இந்த கடிதத்தில் நான் பேச நினைப்பதை எழுதியுள்ளேன். இதுவே என்னுடைய அறிக்கை எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பஜ்ரங் புனியா கூறியிருப்பதாவது: அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் பல வேலைகளில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருப்பீர்கள். நாட்டிலுள்ள மல்யுத்த வீரர்களின் மீது உங்களது கவனத்தைக் கொண்டுவருவதற்காக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக நாட்டிலுள்ள மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன்.

நானும் அவர்களது போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகும் கூட பிரிஜ் பூஷண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் வீதியில் இறங்கி போராடினோம். ஜனவரியில் பிரிஜ் பூஷண் சிங் மீது 19 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. பிரிஜ் பூஷண் சிங் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதால் அவை ஏப்ரலில் வெறும் 7 புகார்களாக குறைந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது பிரதமரிடம் தனது கடிதத்தை ஒப்படைக்க சென்ற பஜ்ரங் புனியா தில்லி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com