சிக்ஸர் மழை: ஷுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து சாதனை!

149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடித்தார் கில்...
சிக்ஸர் மழை: ஷுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து சாதனை!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. 

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை. சொந்தக் காரணங்களுக்காக ராகுல், அக்‌ஷர் படேல் விலகியுள்ளார்கள். ஷ்ரேயஸ் ஐயருக்குக் காயம். இதனால் ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், செளதி, சோதி ஆகியோர் இடம்பெறவில்லை. 

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் 12 ஓவர்கள் வரை நன்கு விளையாடி 60 ரன்கள் சேர்த்தார்கள். 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, டிக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 

சமீபகாலமாக மூன்று ஒருநாள் சதங்களை எடுத்த விராட் கோலி, 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்ட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இஷான் கிஷன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு கில்லும் சூர்யகுமார் யாதவும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். 52 பந்துகளில் அரை சதமெடுத்தார் கில். 4 பவுண்டரிகள் அடித்த சூர்யகுமார், 31 ரன்களில் மிட்செல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஷுப்மன் கில். இது அவருடைய 3-வது ஒருநாள் சதம். 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார். 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த ஷுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார். மேலும் 1000 ரன்களை விரைவாக எடுத்த வீரர்களில் கில்லுக்கு 2-வது இடம். 

பாண்டியா துரதிர்ஷ்டவசமாக 28 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரின் கிளவுஸ் உரசியதால் ஸ்டம்புகளின் பைல்ஸ் விழுந்ததாகப் பலரும் கருதிய நிலையில் பந்து உரசி விழுந்ததாக 3-வது நடுவர் கருதி அவுட் என அறிவித்தார். பிறகு வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் ஷர்துல் தாக்குர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 

122 பந்துகளில் 150 ரன்களை எடுத்த ஷுப்மன் கில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 145 பந்துகளில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்தார். கடைசி ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடித்தார் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். 

இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com