லயன் 5 விக்கெட்டுகள்: மேலும் தடுமாறும் இந்திய அணி!

பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் பரத், இந்தமுறையும் ஏமாற்றினார்.
லயன் 5 விக்கெட்டுகள்: மேலும் தடுமாறும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தூரில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 7, கிரீன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

அணியின் ஸ்கோர் 186-க்கு உயர்ந்த பிறகு ஹேண்ட்ஸ்காம்ப் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்தார். ஒரு பெரிய சரிவுக்கான தொடக்கமாக இந்த விக்கெட் அமைந்தது. அடுத்ததாக கிரீனை 21 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்தார் உமேஷ் யாதவ். சொந்த மண்ணில் உமேஷ் யாதவின் பலத்தை இந்திய அணி இன்று அனுபவித்தது. ஸ்டார்க், மர்ஃபியை போல்ட் செய்து அசத்தினார் உமேஷ் யாதவ். அஸ்னும் தன் பங்குக்கு அலெக்ஸ் கேரி, லயனின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கடைசி 6 விக்கெட்டுகளை 11 ரன்களுக்கு இழந்த ஆஸி. அணி, முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குறைந்தது 150 ரன்கள் முன்னிலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆஸி. அணியால் 88 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

2-வது இன்னிங்ஸிலாவது இந்திய பேட்டர்கள் சிறப்பாக விளையாடி, அடுத்ததாக ஆஸி. அணியை ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்களுக்குப் போதுமான ரன்களைத் தரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனினும் இந்திய அணி பேட்டர்கள் 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறார்கள். ஷுப்மன் கில் 5, ரோஹித் சர்மா, 12, கோலி 13, ஜடேஜா 7, ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் அதிரடியாக விளையாட முயன்று 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார். எனினும் ஸ்டார்க் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இந்திய பேட்டர்களில் புஜாரா மட்டும் ஆஸி. பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு இந்திய அணியின் பாதுகாவலனாக உள்ளார். 

பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் பரத், இந்தமுறையும் ஏமாற்றினார். 3 ரன்களில் லயன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். புஜாராவுடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்த அஸ்வின், 16 ரன்களில் லயன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் புஜாரா, 108 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். லயன் இதுவரை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 54 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 51, அக்‌ஷர் படேல் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com