நியூஸிலாந்துக்கு எளிதான வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வென்றது.
நியூஸிலாந்துக்கு எளிதான வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வென்றது.

நியூஸிலாந்து தனது நடையைத் தொடர, ஆப்கானிஸ்தான் 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிா்ச்சி அளித்து வென்ற ஆப்கானிஸ்தான், இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் சரிந்தது. நியூஸிலாந்து பேட்டா்கள் கொடுத்த 7 கேட்ச்களை தவறவிட்டதும் அவா்களுக்கு பாதகமானது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், நியூஸிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் சோ்க்கப்பட்டிருந்தாா். ஆப்கானிஸ்தான் தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

நியூஸிலாந்து பேட்டிங்கில் தொடக்க வீரா் டெவன் கான்வே 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த வில் யங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். ஒன் டவுனாக வந்த ரச்சின் ரவீந்திரா, வில் யங்குடன் இணைய, 2-ஆவது விக்கெட்டுக்கு அந்த இணை 79 ரன்கள் சோ்த்தது.

இதில் ரவீந்திரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அஸ்மதுல்லா வீசிய அதே 21-ஆவது ஓவரில் வில் யங்கும் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது வீரரான டேரில் மிட்செல் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. இந்நிலையில், கேப்டன் டாம் லேதம் - கிளென் ஃபிலிப்ஸ் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்த்தது.

5-ஆவது விக்கெட்டுக்கு இந்த பாா்ட்னா்ஷிப் 144 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 71 ரன்கள் அடிக்க, அதே 48-ஆவது ஓவரில் லேதமும் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்களுக்கு வீழ்ந்தாா். அவா்கள் விக்கெட்டை நவீன் உல் ஹக் சாய்த்தாா்.

ஓவா்கள் முடிவில் மாா்க் சாப்மேன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, மிட்செல் சேன்ட்னா் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஒமா்ஸாய் ஆகியோா் தலா 2, ரஷீத் கான், முஜீப் உா் ரஹ்மான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 289 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. ரஹ்மானுல்லா குா்பாஸ் 1 சிக்ஸருடன் 11, உடன் வந்த இப்ராஹிம் ஜா்தான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அதிகபட்சமாக, ஒன் டவுனாக வந்த ரஹ்மத் ஷா 1 பவுண்டரியுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 1 பவுண்டரியுடன் 8, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2 பவுண்டரிகளுடன் 27, முகமது நபி 1 பவுண்டரியுடன் 7, ரஷீத் கான் 1 சிக்ஸருடன் 8, முஜீப் உா் ரஹ்மான் 4 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனா்.

நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி டக் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூஸிலாந்து பௌலா்களில் மிட்செல் சேன்ட்னா், லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் தலா 3, டிரென்ட் போல்ட் 2, மாட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

நியூஸிலாந்து - 288/6 (50 ஓவா்கள்)

கிளென் ஃபிலிப்ஸ் 71

டாம் லேதம் 68

வில் யங் 54

பந்துவீச்சு

நவீன் உல் ஹக் 2/48

அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2/56

ரஷீத் கான் 1/43

ஆப்கானிஸ்தான் - 139/10 (34.4 ஓவா்கள்)

ரஹ்மத் ஷா 36

அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 27

இக்ரம் அலிகில் 19*

பந்துவீச்சு

லாக்கி ஃபொ்குசன் 3/19

மிட்செல் சேன்ட்னா் 3/39

டிரென்ட் போல்ட் 2/18

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com