

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்புப் படம் வைரலாகி வருகின்றது.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இதையடுத்து, ஆங்கிலேயா்களால் வைக்கப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயருக்குப் பதிலாக, நாட்டின் பண்டைய பெயரான ‘பாரதம்’ என்பதைப் பயன்படுத்த வேண்டுமென ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைவா்கள் சிலரும் அக்கருத்தை வழிமொழிந்தனா்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஜி20 மாநாட்டு அழைப்பிதழிலும், பிரதமரின் இந்தோனேசிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரதம் எனக் அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த பெயர் மாற்றத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், அதிகளவிலான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்புப் படத்தில் ‘பாரத்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசின் பெயர் மாற்றத்துக்கு தோனி ஆதரவளிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், நாட்டின் 75-ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது, பாரத் என்ற சொல் இடம்பெற்ற முகப்புப் படத்தை தோனி மாற்றினார்.
இன்ஸ்டாகிராமில் 4.5 கோடிக்கும் அதிகமான பின்பற்றுபவர்களை கொண்ட தோனி, எப்போதாவதுதான் தனது சொந்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.