கே.எல். ராகுல் மீதான விமர்சனம்: கங்குலி என்ன சொல்கிறார்?

கே.எல். ராகுலுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்போது ரன்கள் எடுப்பதற்கான வழிகளைக் கண்டறிவார்...
கே.எல். ராகுல் மீதான விமர்சனம்: கங்குலி என்ன சொல்கிறார்?

கே.எல். ராகுலுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்போது ரன்கள் எடுப்பதற்கான வழிகளைக் கண்டறிவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடியுள்ளார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் கே.எல். ராகுல் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் பற்றி இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறியதாவது:

இந்திய அணிக்காக விளையாடுபவர்கள் சரியாக விளையாடாமல் போனால் விமர்சனங்கள் நிச்சயம் வரும். கே.எல். ராகுலுக்கு மட்டுமல்ல அதற்கு முன்பும் பல வீரர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இந்திய அணியின் முக்கியமான வீரராக கே.எல். ராகுலைக் கருதுகிறது அணி நிர்வாகம். கேப்டனும் பயிற்சியாளரும் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம். 

கடந்த சில வருடங்களாக நன்கு விளையாடி வந்தார் கே.எல். ராகுல். ஆனால் இந்தியாவில் மேல்வரிசை பேட்டர்களிடம் அதிகமான ரன்கள் எதிர்பார்க்கப்படும். ஏனெனில் அதற்கு முன்பு மற்றவர்கள் நிர்ணயித்துள்ள தரம் மிகவும் அதிகம். சில காலக்கட்டம் சரியாக விளையாடாமல் போனால் விமர்சனங்களை வருவது இயல்பு. கே.எல். ராகுலிடம் திறமை உள்ளது. அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்போது ரன்கள் எடுப்பதற்கான வழியைக் கண்டறிவார். ராகுலின் பிரச்னை என்பது பேட்டிங் தொழில்நுட்பம் மற்றும் உளவியல் சார்ந்தது என இரண்டையும் கூறலாம். ஏற்கெனவே ஒரு பேட்டர் ரன்கள் எடுக்காத நிலையில் இந்திய ஆடுகளங்களில் விளையாடும்போது பிரச்னை மேலும் பெரிதாகிறது. இந்திய அணி நிர்வாகம் மிகவும் உயர்வாக எண்ணுவதால் தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com