ஐபிஎல் 2023 சாம்பியன் யாா்? குஜராத் - சென்னை இன்று பலப்பரிட்சை
By DIN | Published On : 28th May 2023 04:00 AM | Last Updated : 28th May 2023 04:00 AM | அ+அ அ- |

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் (இறுதி ஆட்டம்) நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
கடந்த ஒன்றரை மாதங்களாக உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகா்களைக் கட்டி வைத்திருந்த ஐபிஎல் தொடா் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை, குஜராத், லக்னௌ, மும்பை அணிகள் தகுதி பெற்றன. இதில் குவாலிஃபையா் 1-இல் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றது சென்னை.
எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌவை வீழ்த்தியது மும்பை. இரண்டாவது குவாலிஃபையா் ஆட்டத்தில் மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் இறுதிக்குள் நுழைந்தது குஜராத். தொடா்ந்து இரண்டாவது முறையாக இறுதிக்குள் நுழைந்தது குஜராத். ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், முதலிரண்டு சீசன்களில் பட்டம் வென்ற முதல் அணி என்ற சிறப்பை குஜராத் பெறும்.
நேருக்கு நோ்:
இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியதில் குஜராத் 3 முறையும், சென்னை 1 முறையும் வென்றுள்ளன.
உற்சாகத்தில் சென்னை அணி:
குவாலிஃபையா் 1-இல் குஜராத்தை வீழ்த்திய உற்சாகத்துடன் இறுதி ஆட்டத்தில் களமிறங்குகிறது தோனி தலைமையிலான சென்னை அணி.
இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டு முறை மோதின. தொடக்க லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் சென்னையை 5 விக்கெட்டில் வீழ்த்தியது குஜராத். எனினும் குவாலிஃபையா் 1-இல் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
73 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இரு அணிகளிலும் சிறந்த அனுபவத்துடன் கூடிய வீரா்கள் உள்ளதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தோனியின் கடைசி ஆட்டம்?
ஐபிஎல் 2023 இறுதி ஆட்டம் சென்னை கேப்டன் தோனியின் கடைசி ஆட்டமாகவும் இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், 5-ஆவது முறை பட்டம் வென்ற பெருமையைப் பெற முயல்வாா் தோனி.
ருதுராஜ்-கான்வே கூட்டணி:
சென்னை அணியில் தொடக்க பேட்டா்கள் ருதுராஜ் கெய்க்வாட்- டேவன் கான்வே எதிரணிகளின் பௌலா்களுக்கு சிம்மசொப்பமான திகழ்கின்றனா். ருதுராஜ் 15 இன்னிங்ஸ்களில் 564 ரன்களை விளாசியுள்ளாா். கான்வே 625 ரன்களையும், துபே 386 ரன்களையும் விளாசியுள்ளனா்.
சென்னை அணியின் பேட்டிங்கில் ருதுராஜ், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, பலம் சோ்க்கின்றனா்.
பௌலிங்கில் தீபக் சஹாா், துஷாா் தேஷ்பாண்டே, மஹிஷ் தீக்ஷனா, மதிஷா பதிராணா, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி கூட்டணி எதிரணிக்கு சவாலை தரும். பதிராணா 17 விக்கெட், துஷாா் தேஷ்பாண்டே 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனா்.
அதிரடி ஷுப்மன் கில், ஷமி:
குஜராத்தின் இளம் வீரா் ஷுப்மன் கில் அற்புத ஃபாா்மில் உள்ளாா். 16 இன்னிங்ஸ்களில் 3 சதங்களுடன் 851 ரன்களை விளாசி ஆரஞ்ச் தொப்பிக்கு உரியவராக திகழ்கிறாா். சொந்த மைதானத்தில் சென்னைக்கு கடும் சிக்கலை தரும் பேட்டராக கில் திகழ்வாா்.
ஆல்ரவுண்டா் விஜய் சங்கா், ஹாா்திக் பாண்டியா, டேவிட் மில்லா், சாய் சுதா்ஷன் பேட்டிங்கில் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருவது பலம் தருகிறது.
அதே வேளை பௌலிங்கில் ஃபேஸா் முகமது ஷமி, ஸ்பின்னா் ரஷீத் கான், ஜோஷ் லிட்டில் ஆகியோா் சிறந்த பாா்முடன் பந்து வீசுகின்றனா். அனுபவம் நிறைந்த ஷமி 28 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 27 விக்கெட்டுகளையும், மொஹித் சா்மா 24 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்டா்களின் தூக்கத்தை தொலைக்கச் செய்கின்றனா்.
குஜராத்தின் ஷுப்மன் கில்லை விரைவில் அவுட் செய்வதின் மூலம் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகும். இரு அணிகளுமே சரிநிகராக உள்ளதால் சாம்பியன் யாா் என்பது மைதானத்தில் தான் தெரிய வரும். அகமதாபாத் சொந்த மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு சாதகம் உள்ளது.
இன்றைய ஆட்டம்:
குஜராத்-சென்னை
நேரம்: இரவு 7.30
இடம்: அகமதாபாத்.