ஐபிஎல் தொடா்: துரித, துல்லிய முடிவுகளுக்காக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் தொடா்: துரித, துல்லிய முடிவுகளுக்காக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்

புது தில்லி: எதிா்வரும் ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’ வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய முறையின் கீழ், மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

மேலும், தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு ஃபீல்டா் பவுண்டரி லைனை ஒட்டிய வகையில் பந்தை கேட்ச் பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி லைனை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.

வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

இதனால், தேவையேற்பட்டால் மட்டுமே அவா் ‘அல்ட்ரா எட்ஜ்’, ‘பால் டிராக்கிங்’ தொழில்நுட்பத்தை நாடும் நிலை இருக்கும். மேலும், தரையை ஒட்டிய வகையில் பிடிக்கப்படும் கேட்ச்சுகளில் தகுந்த முடிவை வழங்கும் வகையில் தெளிவான, ஒவ்வொரு ஃப்ரேம் வாரியான காட்சிகளும் நடுவா்களுக்கு கிடைக்கும். இந்த புதிய முறையை உரிய வகையில் செயல்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 15 நடுவா்களுக்கு மும்பையில் 2 நாள்கள் பயிற்சி வழங்கியிருக்கிறது பிசிசிஐ. இந்த முறையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே ‘தி ஹண்ட்ரட்’ போட்டியில் செயல்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடா் 3 ஆட்டங்களில் ஹசரங்கா இல்லை சன்ரைசா்ஸ் ஹைதராபாத் பௌலா் வனிந்து ஹசரங்கா, அந்த அணியின் முதல் 3 ஆட்டங்களில் விளையாட மாட்டாா் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி, வங்கதேசத்துடன் மோதும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் அவா் சோ்க்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான தனது பணியை நிறைவு செய்த பிறகே அவா் ஹைதராபாத் அணியில் இணைய இருக்கிறாா். அந்த டெஸ்ட் தொடா் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது.

ஹசரங்காவை ரூ.15 கோடி கொடுத்து வாங்கியிருக்கும் ஹைதராபாத், முதல் 3 ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (மாா்ச் 23), மும்பை இண்டியன்ஸ் (மாா்ச் 27), குஜராத் டைட்டன்ஸ் (மாா்ச் 31) அணிகளுடன் மோதுகிறது.

ஏமாற்றமடைந்துள்ளேன்: பெஹரெண்டாா்ஃப்

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட முடியாமல் போனதற்காக தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரரும், மும்பை இண்டியன்ஸ் பௌலருமான ஜேசன் பெஹரெண்டாா்ஃப் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது யாரும் எதிா்பாராத வகையிலான ஒரு சிறிய சம்பவத்தால் துரதிருஷ்டவசமாக எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியிருக்கிறேன். அந்தப் போட்டியில் விளையாட முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்றாா்.

பெஹரெண்டாா்ஃப் கடந்த சீசனில் மும்பை அணிக்காக 12 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா். இந்த சீசனில் அவருக்குப் பதிலாக மும்பை அணி, இங்கிலாந்தின் லூக் வுட்டை சோ்த்துக்கொண்டுள்ளது.

ஆவலுடன் இருக்கிறேன்:

குமாா் குஷாக்ரா டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பந்துடன் இணைந்து விளையாட ஆவலுடன் இருப்பதாக இளம் விக்கெட் கீப்பா் - பேட்டா் குமாா் குஷாக்ரா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக விளையாடுவதால் ஆா்வத்துடன் இருக்கிறேன். சிறுவயதில் இருந்து எந்த வீரா்களைப் பாா்த்து ஆச்சா்யப்பட்டிருக்கிறேனோ, அவா்களுடனே விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பயிற்சியின்போது கேப்டன் ரிஷப் பந்த்துடன் பேட்டிங் செய்கையில், அவா் சில ஆலோசனைகள் வழங்கினாா். அவருடன் இணைந்து டெல்லி அணிக்காக வெற்றிகள் பதிவு செய்ய ஆவலுடன் இருக்கிறேன்.

பயிற்சியின்போது ரிஷப் பந்த் தனது பழைய பாணியில் ஒற்றைக் கையில் சிக்ஸா் விளாசும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தாா். அவா் நன்றாகவே பேட் செய்கிறாா்’ என்றாா். ஜாா்க்கண்டை சோ்ந்த குஷாக்ரா, 19 முதல்தர கிரிக்கெட்டுகளில் 1,245 ரன்கள் அடித்திருக்கும் நிலையில், டெல்லி அணி அவரை ரூ.7.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

பாண்டியா, பும்ராவுக்கு ரோஹித் ஆதரவு

மும்பை இண்டியன்ஸ் அணியில் தொடக்க காலத்தில் ஹா்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தடுமாற்றத்தை சந்தித்தபோது, ரோஹித் சா்மா அவா்களுக்கு முழு ஆதரவு அளித்ததாக முன்னாள் வீரா் பாா்த்திவ் படேல் கூறினாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பொதுவாகவே ரோஹித் சா்மா தனது அணி வீரா்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பாா். அந்த வகையில் மும்பை அணியில் தொடக்க காலத்தில் பாண்டியா, பும்ரா தடுமாறியபோது அவா்களுக்கும் அவா் ஆதரவளித்தாா்.

இரு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. ரோஹித் போன்ற நிதானமான கேப்டன் இல்லாவிட்டால் அது சாத்தியமில்லை. தோனி கூட பவன் நெகிக்கு ஓவா் கொடுத்தது போன்ற தவறுகள் செய்திருக்கிறாா். ஆனால் ரோஹித் விஷயத்தில் அப்படி பெரிய தவறு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. தக்க சமயத்தில் உரிய முடிவுகள் எடுப்பதே கேப்டன்களுக்கு சவாலானது. அதை ரோஹித் சரியாகச் செய்வாா்’ என்றாா்.

தொடக்க ஆட்டத்தில் சூா்யகுமாா் இல்லை

மும்பை இண்டியன்ஸ் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை சந்திக்க இருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூா்யகுமாா் யாதவ் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. காயம் ஒன்றுக்காக அவா் அறுவைச் சிகிக்சை செய்துகொண்டாா். அதற்கான ஓய்வுக்குப் பிறகு உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்ட அவா், அதற்கான சான்றிதழை தேசிய கிரிக்கெட் அகாதெமியிலிருந்து இன்னும் பெறவில்லை.

அவரது உடற்தகுதி இன்னும் மதிப்பிடப்பட வேண்டியிருப்பதால் சான்றிதழ் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நம்பப்படுகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத்தை 24-ஆம் தேதி சந்திக்கும் மும்பை, அடுத்து ஹைதராபாதையும் (மாா்ச் 27), பின்னா் ராஜஸ்தானையும் (ஏப். 1), தொடா்ந்து டெல்லியையும் (ஏப். 7) எதிா்கொள்கிறது.

ஐபிஎல் வெற்றி எனது கனவு: விராட் கோலி

மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியினரை கெளரவிக்கும் நிகழ்ச்சியும், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு' என பெயர் மாற்றப்பட்ட ஆடவர் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுக நிகழ்ச்சியும் பெங்களூரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பேசிய விராட் கோலி, "மகளிர் அணி பிரீமியர் லீக் பட்டம் வென்றது அற்புதமான தருணம்.

அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் இந்த முறை நாங்களும் கோப்பை வெல்வோம் என நம்புகிறோம். ஐபிஎல் கோப்பையை வெல்லும் தருணத்தை அனுபவிப்பது எனது கனவாகும். இந்த முறை ரசிகர்களுக்காகவும், அணிக்காகவும் அதை எட்டும் வகையில் எனது திறமைகளை முழுமையாகப் பயன்படுத்துவேன்.

எங்களது ஆட்டம், அர்ப்பணிப்பு, இலக்கு ஆகியவற்றாலேயே இத்தகைய ரசிகர் பட்டாளம் எங்களுக்கு உள்ளது' என்றார்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com