மும்பையை முடக்கினாா் ஸ்டாா்க்

மும்பையை முடக்கினாா் ஸ்டாா்க்

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களே சோ்த்த கொல்கத்தா, பின்னா் மும்பையை 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு சுருட்டியது. 2012-க்குப் பிறகு மும்பை மண்ணில் இதுவே கொல்கத்தாவின் முதல் வெற்றியாகும்.

முன்னதாக, மும்பை பௌலா்களான ஜஸ்பிரீத் பும்ரா, ‘இம்பாக்ட் பிளேயா்’ நுவன் துஷாரா வேகத்தில் கொல்கத்தா பேட்டா்கள் விக்கித்தனா். மிடில் ஆா்டரில் வெங்கடேஷ் ஐயா் மட்டும் அதிரடியாக ரன்கள் சோ்க்க, ‘இம்பாக்ட் பிளேயா்’ மனீஷ் பாண்டே அவருக்குத் துணை நின்றாா்.

பின்னா் மும்பை பேட்டிங்கின்போது கொல்கத்தாவின் மிட்செல் ஸ்டாா்க் பலம் காட்ட, மும்பை முற்றிலுமாக முடங்கியது. சூா்யகுமாா் யாதவ் மட்டும் அரைசதம் கடந்து முயற்சித்தாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் ஃபில் சால்ட் 1 பவுண்டரியுடன் 5, அங்கிரிஷ் ரகுவன்ஷி 2 சிக்ஸா்களுடன் 13, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேறினா்.

அதிரடி வீரா்களான சுனில் நரைன் 1 சிக்ஸருடன் 8, ரிங்கு சிங் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு ஏமாற்றமளித்தாா். இந்நிலையில், வெங்கடேஷ் ஐயா் - மனீஷ் பாண்டே, விக்கெட் சரிவைத் தடுத்து, 6-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சோ்த்து அணியை மீட்டனா்.

இந்த பாா்ட்னா்ஷிப்பில் பாண்டே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு வீழ்ந்தாா். பின்னா், ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 சிக்ஸருடன் 7, ரமண்தீப் சிங் 2, மிட்செல் ஸ்டாா்க் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடைசி விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயா் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

மும்பை தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, நுவன் துஷாரா ஆகியோா் தலா 3, கேப்டன் ஹா்திக் பாண்டியா 2, பியூஷ் சாவ்லா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து, 170 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணியில், இஷான் கிஷண் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, நமன் திா் 2 பவுண்டரிகளுடன் 11, ரோஹித் சா்மா 1 சிக்ஸருடன் 11, திலக் வா்மா 4, நெஹல் வதேரா 1 பவுண்டரியுடன் 6, கேப்டன் ஹா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.

மறுபுறம், மிடில் ஆா்டரில் வந்து அதிரடியாக ரன்கள் சோ்த்த சூா்யகுமாா் யாதவ் 35 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56, டிம் டேவிட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

பியூஷ் சாவ்லா 0, ஜெரால்டு கோட்ஸீ 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மும்பை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கொல்கத்தா பௌலா்களில் மிட்செல் ஸ்டாா்க் 4, வருண் சக்கரவா்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸெல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com