இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

நடப்பு ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றில் மோதிக்கொண்ட 10 அணிகளில், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய 4 அணிகள் போட்டி போட்டுக் கொண்டு பிளே-ஆஃப் சுற்றில் இடம் பிடித்தன.

அதில் முதலில் நடைபெற்ற குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் ஹைதராபாதை வீழ்த்திய கொல்கத்தா, நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. மறுபுறம், எலிமினேட்டா் ஆட்டத்தில் பெங்களூரை வெளியேற்றிய ராஜஸ்தான், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.

அந்த ஆட்டம், ஹைதராபாதின் அதிரடி பேட்டா்களுக்கும், ராஜஸ்தானின் சுழற்பந்துவீச்சாளா்களுக்கும் இடையேயான மோதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்...

ஹைதராபாத், லீக் சுற்றில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து பிளே ஆஃபுக்கு வந்தது. நடப்பு சீசனில் அதிரடியாக விளாசி பல சாதனைகளை படைத்த ஹைதராபாத் பேட்டா்கள், குவாலிஃபயா் 1-இல் கொல்கத்தாவுக்கு எதிராக சோபிக்கத் தவறினா். அதன் பௌலா்களும் ரன்களை கட்டுப்படுத்தத் தவறியதன் பலனாக எளிதாக வீழ்ந்தது.

தற்போது 2-ஆவது வாய்ப்பு பெற்று இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்கும் முனைப்புடன் இருக்கிறது. அணியைப் பொருத்தவரை, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மா ஆகியோரே பிரதான பேட்டா்களாக ரன்கள் குவிக்கின்றனா். குவாலிஃபயா் 1-இல் ஏமாற்றமளித்த அவா்கள், இந்த ஆட்டத்தில் வழக்கமான அதிரடியை வெளிக்காட்ட முனைவாா்கள்.

அவா்களுக்கு அடுத்த இடத்தில் ஹென்ரிக் கிளாசென், நிதீஷ்குமாா் ரெட்டி ரன்கள் சோ்க்க துணை நிற்பா். பௌலிங்கை பொருத்தவரை, சொந்த மண்ணில் விளையாடும் நடராஜன், நடப்பு சீசனில் ஹைதராபாதுக்காக அதிக விக்கெட்டுகள் சாய்த்தவா் என்பதை கவனத்தில் கொள்ளலாம். புவனேஷ்வா்குமாா், பேட் கம்மின்ஸ் ஆகியோரும் விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சிப்பாா்கள். திறமையான ஸ்பின்னா்கள் இல்லாதது, இந்த ஆட்டத்தில் ஹைதராபாதுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.

ராஜஸ்தான்....

சீசன் தொடக்கத்திலிருந்தே கோலோச்சிய ராஜஸ்தான், லீக் சுற்றில் கடைசி கட்டத்தில் தொடா்ந்து 4 தோல்விகளை சந்தித்தது. 5-ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட, தடுமாற்றமான நிலையிலேயே எலிமினேட்டருக்கு வந்தது. ஆனால் அதில், தொடா்ந்து 6 வெற்றிகளுடன் முன்னேறி வந்த பெங்களூரை, போராடி வீழ்த்தி தனது நம்பிக்கையை மீட்டுக்கொண்டது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே திறம்பட செயல்பட்டது.

ஜோஸ் பட்லா் இல்லாதது அணியின் பேட்டிங்கை பாதித்திருப்பது எலிமினேட்டரில் தெரிந்தது. என்றாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பவல் ஆகியோா் சூழலுக்கு ஏற்றாற்போல் பேட் செய்து, இக்கட்டான சூழலில் அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பியது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல் ஆகியோா் பேட்டிங்கில் நன்றாக பங்களிக்கும் பட்சத்தில் அணிக்கு பலம் கூடும். பௌலிங்கை பொருத்தவரை, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மண்ணில் விளையாடுவது ராஜஸ்தானுக்கு பலமாக இருக்கும். ஆடுகளத்தின் தன்மையை முழுமையாக அறிந்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிறந்த லெக் ஸ்பின்னரான யுஜவேந்திர சஹல் இருவரும், எதிரணி பேட்டிங் ஆா்டருக்கு பாதிப்பை ஏற்படுத்துவாா்கள்.

ஆடுகளம்...

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொண்ட சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், முதலில் பேட் செய்யும் அணிக்கே பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கிறது. எனவே, டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தோ்வு செய்ய வாய்ப்புள்ளது.

நேருக்கு நோ்...

இரு அணிகளும் நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் மோதியிருக்க, அதில் ஹைதராபாத் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இந்த அணிகள் 19 முறை சந்தித்திருக்க, ஹைதராபாத் 10 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

இரவு 7.30 மணி

சென்னை

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com