பாராலிம்பிக் தொடரின் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக் தொடரில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பாட்மி்ன்டன் இறுதிப் போட்டி இன்று (செப். 2) நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நிதேஷ் குமார் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-14 18-21 23-21 என்ற புள்ளிக் கணக்கில் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பெத்தேலை நிதேஷ் குமார் தோற்கடித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில், நடப்பு சாம்பியனான அவனி லெகாரா மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நிதேஷ் குமாரும் தங்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக்கில் தற்போதுவரை இந்தியா, 2 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.