உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

அர்ஜுனா விருது பெற்றனர் வைஷாலி, ஷமி

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 25 பேர் செவ்வாய்க்கிழமை அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

Published On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

புது தில்லி: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 25 பேர் செவ்வாய்க்கிழமை அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 
அவர்களோடு, சிறந்த பயிற்சியாளர்களுக்கான "துரோணாச்சார்யா விருது' 8 பேருக்கும், ஓய்வுக்குப் பிறகும் பங்களித்து வருவோருக்கான "தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது' 3 பேருக்கும், கல்வி நிறுவனங்களுக்கான "மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோப்பை' 3 பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டன. 
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்காக தேசிய விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்காக கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கெளரவித்தார். இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், விருது பெற்ற வீரர், வீராங்கனைகளின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் சாய்த்து, பல ஆட்டங்களில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்துள்ளதற்காக அர்ஜுனா விருது பெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இந்தியாவின் 84-ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்த தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி, கிராண்டமாஸ்டர்களாக இருக்கும் முதல் சகோதர-சகோதரி என்ற உலக சாதனையை சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இரு கைகளும் இல்லாமலேயே உலக, ஆசிய, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஷீத்தல் தேவியும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 
இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி விருது பெறுகையில் புகைப்படத்துக்காக, அவருக்குப் பதிலாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவே அவரின் விருதுகளை கைகளில் ஏந்திக் கொண்டார். அதேபோல், பாரா துடுப்புப் படகு வீராங்கனை பிராச்சி யாதவ் சக்கரநாற்காலியில் விருது பெற வருகையில், குடியரசுத் தலைவர் தனது மேடையில் இருந்து இறங்கி பாதி தொலைவு வந்து பிராச்சிக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்வுகளின்போது பார்வையாளர்கள் கரவொலியால் அரங்கு அதிர்ந்தது.
தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கமாக, ஹாக்கி நட்சத்திரம் மேஜர் தியான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும். கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோரையும் கணக்கில் கொள்ளும் பொருட்டு, விருது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
தமிழர்கள்:  நிகழ்ச்சியில், அர்ஜுனா விருது பெற்ற வைஷாலியுடன், துரோணாச்சார்யா விருது பெற்ற ஆர்.பி.ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகர் (மல்லர்கம்பம்), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோர் தமிழர்களாவர்.
பங்கேற்கவில்லை: விளையாட்டுத் துறையின் உயரியதான "தியான்சந்த் கேல் ரத்னா' விருது, பாட்மின்டன் இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க, கோலாலம்பூர் சென்றுள்ளதால் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 
அதேபோல், அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஈஷா சிங்கும், போட்டியில் பங்கேற்க இந்தோனேசியா சென்றுள்ளதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. 

பிரதமர் வாழ்த்து

"2023-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துகள். அவர்களது சாதனைகளும், அர்ப்பணிப்பும் நம் தேசத்துக்கு முன்னுதாரணமாக உள்ளது. விருது பெற்றோர், தாங்கள் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கியதுடன், உலக அரங்கில் இந்திய தேசியக் கொடியையும் உயரப் பறக்கச் செய்துள்ளனர்' - பிரதமர் நரேந்திர மோடி.

மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது

சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி    பாட்மின்டன்
சிராக் ஷெட்டி    பாட்மின்டன்

துரோணாச்சார்யா விருது

லலித்குமார்    மல்யுத்தம்
ஆர்.பி.ரமேஷ்    செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி    பாரா தடகளம்
ஷிவேந்திர சிங்    ஹாக்கி
கணேஷ் பிரபாகர்    மல்லர்கம்பம்

துரோணாச்சார்யா விருது - (வாழ்நாள் சாதனையாளர்)


ஜஸ்கிரத்சிங் கிரெவால்    கோல்ஃப்
இ.பாஸ்கரன்    கபடி
ஜெயந்தகுமார் புஷிலால்    டேபிள் டென்னிஸ்


தியான்சந்த் விருது - (வாழ்நாள் சாதனையாளர்)

மஞ்ஜுஷா கன்வர்    (பாட்மின்டன்)
வினீத்குமார் சர்மா    (ஹாக்கி)
கவிதா செல்வராஜ்    (கபடி)

மெளலானா அபுல்கலாம் ஆஸாத் கோப்பை

குருநானக் தேவ் 
பல்கலை. (அமிருதசரஸ்)    முதலிடம்
லவ்லி தொழில்முறை பல்கலை. (பஞ்சாப்)    2-ஆம் இடம்
குருக்ஷேத்ரா பல்கலை. (குருஷேத்ரம்)    3-ஆம் இடம்

அர்ஜுனா விருது

ஓஜாஸ் பிரவீண் தியோடேல்    வில்வித்தை
அதிதி சுவாமி    வில்வித்தை
முரளி ஸ்ரீசங்கர்    தடகளம்
பாருல் செளதரி    தடகளம்
முகமது ஹசாமுதின்    குத்துச்சண்டை
வைஷாலி    செஸ்
முகமது ஷமி    கிரிக்கெட்
அனுஷ் அகர்வல்லா    குதிரையேற்றம்
திவ்யகிருதி சிங்    குதிரையேற்றம்
தீக்ஷா தாகர்    கோல்ஃப்
கிருஷண் பகதூர் பாதக்    ஹாக்கி
சுஷீலா சானு    ஹாக்கி
பவன்குமார்    கபடி
ரிது நெகி    கபடி
நஸ்ரீன்    கோ-கோ
பிங்கி    லான் பெளல்ஸ்
ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர்    துப்பாக்கி சுடுதல்
ஈஷா சிங்    துப்பாக்கி சுடுதல்
ஹரிந்தர்பால் சிங் சந்து    ஸ்குவாஷ்
அஹிகா முகர்ஜி    டேபிள் டென்னிஸ்
சுனில்குமார்    மல்யுத்தம்
அன்டிம்    மல்யுத்தம்
ரோஷிபினா தேவி    வுஷு
ஷீத்தல் தேவி    பாரா வில்வித்தை
அஜய்குமார் ரெட்டி    பார்வையற்றோர் கிரிக்கெட்
பிராச்சி யாதவ்    பாரா கேனோயிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.