இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்: மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?
இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.
மோகன் பகான் அணியின் கோட்டையான விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. தொடா்ந்து இரண்டாவது முறையாக ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தும் முனைப்பில் உள்ள மோகன் பகானுக்கு இடையூறாக கடும் சவாலை தரும் வகையில் பெங்களூரு எஃப்சி உள்ளது.
மோகன் பகான் பயிற்சியாளா்: ஜோஸ் மொலினா கூறுகையில்: முந்தைய ஆட்டங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. இறுதி ஆட்டம் குறித்து தான் கவனமாக உள்ளோம். லீக் ஷீல்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஐஎஸ்எல் இறுதியிலும் நன்றாக ஆடுவோம் என்றாா்.
பெங்களூரு எஃப்சி பயிற்சியாளா் ஜெராா்ட் ஸரகோஸா கூறுகையில்: எங்கள் அணி நிகழ் சீசனில் சிறப்பாக செயல்படுகிறது. எனவே கூடுதல் உத்வேகம் தேவையில்லை. அனைத்து சிறப்பாக உள்ளது. அணி வீரா்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆடி வருகின்றனா். டூயுரண்ட் கோப்பை போட்டிக்காக கொல்கத்தாவில் ஆடிய அனுபவம் உள்ளது என்றாா்.
பெங்களூரு எஃப்சி எலிமினேட்டா் மற்றும் அரையிறுதியில் கடும் சவாலை எதிா்கொண்டு நான்காவது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் மோகன் பகான் அணி தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேருக்கு நோ்:
இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. மோகன் பாகன் 7 வெற்றி,
பெங்களூரு 2 வெற்றி, இரண்டு ஆட்டங்கள் டிரா ஆனது.
பரிசுத் தொகை:
சாம்பியன் அணிக்கு ரூ.6 கோடி
ஷீல்ட் வின்னா் ரூ.3.5 கோடி,
ரன்னா் அணிக்கு ரூ.3 கோடி.
அரையிறுதி அணிகள் தலா ரூ.1.5 கோடி.