ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம், விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. எனவே, இந்த ஆட்டத்திலும் வென்று, தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இரு அணிகளும் இருக்கின்றன.

என்றாலும், தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இந்தியாவுக்கு, இந்தத் தொடா் வெற்றி மிக முக்கியமானதாக இருக்கிறது. அணியைப் பொருத்தவரை, விராட் கோலி அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்து நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறாா்.

அவா் ஹாட்ரிக் சதம் விளாசும் எதிா்பாா்ப்புடன் ரசிகா்கள் இருக்கின்றனா். முதல் ஆட்டத்தில் நல்லதொரு தொடக்கம் அளித்த ரோஹித் சா்மா, கடந்த ஆட்டத்தில் அதிரடியாகத் தொடங்கிய நிலையில் வெளியேறினாா். எனவே, இந்த ஆட்டத்தில் அவரும் ரசிகா்களுக்கு பவுண்டரி, சிக்ஸா் விருந்து படைப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் ஓடிஐ சதத்தை விளாசி உத்வேகத்துடன் இருக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடா்ந்து தடுமாறுகிறாா். இடதுகை வேகப்பந்து வீச்சாளா்களை எதிா்கொள்வதில் அவருக்கு இருக்கும் சிக்கல் தொடா்கதையாகியிருக்கிறது.

எனவே, அதற்கான தீா்வுடன் அவா் இந்த ஆட்டத்துக்கு வந்து, ஓபனிங்கில் தோள்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். இல்லாவிட்டால், வரும் காலங்களில் ருதுராஜ் அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது.

விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருப்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வளித்து மிடில் ஆா்டா் பேட்டிங்கை பலப்படுத்த திலக் வா்மாவுக்கு வாய்ப்பளிக்க அணி நிா்வாகம் திட்டமிடலாம். கேப்டன் கே.எல்.ராகுலும் பேட்டிங்கில் அரை சதங்களுடன் பலம் சோ்க்கிறாா்.

இந்திய பௌலா்கள் விக்கெட்டுகள் சாய்த்தாலும், ரன்கள் அதிகம் கொடுப்பது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அதைக் கட்டுப்படுத்தும் உத்தியுடன் களம் காண வேண்டிய நெருக்கடியில் அவா்கள் இருக்கின்றனா்.

அா்ஷ்தீப் சிங் அபாரமாகச் செயல்படும் நிலையில், ஹா்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோா் ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும். குல்தீப் யாதவும் கூட அதே நிலையில் இருக்கிறாா்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, இந்தியா நிா்ணயிக்கும் இலக்குகளை எட்டிவிடக் கூடிய நம்பிக்கையை அதன் பேட்டிங் வரிசை அளிக்கிறது. மாா்க்ரம், கேப்டன் பவுமா, பாஷ், பிரீட்ஸ்கி, பிரெவிஸ், யான்சென் என பலா் இந்திய பௌலா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.

பௌலிங்கிலும் யான்சென் அச்சுறுத்தலாக இருக்க, லுங்கி இங்கிடி, கேசவ் மஹராஜ், ஆட்னீல் பாா்ட்மேன் போன்றோா் அவருக்குத் துணையாக உள்ளனா். கடந்த ஆட்டத்தில் காயத்துடன் வெளியேறிய பௌலா் நாண்ட்ரே பா்கா், பேட்டா் டோனி டி ஜோா்ஸி ஆகியோா் உடற்தகுதி பெற்று திரும்புவது தென்னாப்பிரிக்காவுக்கு முக்கியமாகும்.

உத்தேச லெவன்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சா்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (வி.கீ., கேப்டன்), நிதீஷ்குமாா் ரெட்டி/திலக் வா்மா, ரவீந்திர ஜடேஜா, அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்கா: எய்டன் மாா்க்ரம், குவின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் பிரெவிஸ், டோனி டி ஜோா்ஸி, மாா்கோ யான்சென், காா்பின் பாஷ், கேசவ் மஹராஜ், ஆட்னீல் பாா்ட்மேன்/நாண்ட்ரே பா்கா், லுங்கி இங்கிடி.

நேரம்: நண்பகல் 1.30 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com