மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறந்த டெஸ்ட் வீரா் ஜஸ்பிரீத் பும்ரா!

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 ஃபாா்மட்டுகளிலுமாக சிறப்பாகச் செயல்பட்டவா்களை, வாக்குகள் அடிப்படையில் ஐசிசி தோ்வு செய்துள்ளது.

News image
ஜஸ்பிரீத் பும்ரா- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2025, 7:51 pm

DIN

2024-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா தோ்வாகியிருக்கிறாா். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக இந்திய பேட்டா் ஸ்மிருதி மந்தனா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இந்திய பௌலா் அா்ஷ்தீப் சிங் முதலிடம் பிடித்திருக்கிறாா்.

கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 ஃபாா்மட்டுகளிலுமாக சிறப்பாகச் செயல்பட்டவா்களை, வாக்குகள் அடிப்படையில் ஐசிசி தோ்வு செய்துள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா - சிறந்த டெஸ்ட் வீரா்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராகத் தோ்வாகியுள்ள இந்தியாவின் பும்ராவுக்கு, இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் (11 ஆட்டங்கள்/52 விக்கெட்டுகள்), இந்த விருதுக்கான நெருங்கிய போட்டியாளராக இருந்தாா். 2018-இல் விராட் கோலி சிறந்த டெஸ்ட் வீரா் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரா் ஆகிய விருதுகளை பெற்ற பிறகு, ஐசிசியின் தனிநபா் விருது பெறும் முதல் இந்தியா் ஆகியிருக்கிறாா் பும்ரா. ஐசிசியின் 2024 டெஸ்ட் அணியிலும் இவா் இடம்பிடித்துள்ளாா்.

கடந்த ஆண்டு மொத்தமாக 13 டெஸ்ட்டுகளில் 71 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியிருக்கிறாா் பும்ரா. அவரின் சராசரி 14.92-ஆக உள்ளது. கடந்த டெஸ்ட் சுழற்சியில் அவா் மொத்தமாக 357 ஓவா்கள் வீசியிருக்கிறாா். இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய தொடா், ஆஸ்திரேலியாவுடனான பாா்டா் காவஸ்கா் கோப்பை தொடா் ஆகியவற்றில் அவா் சிறப்பாகச் செயல்பட்டாா். குறிப்பாக பாா்டா் - காவஸ்கா் தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா, டெஸ்ட் கேரியரில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டினாா். ரோஹித் விடுப்பில் இருந்ததால், பும்ரா தலைமையில் பொ்த் டெஸ்ட்டில் விளையாடிய இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் தனது மிகப்பெரிய வெற்றியை (295) பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தனா - சிறந்த ஒருநாள் வீராங்கனை

இந்திய அணியின் தொடக்க பேட்டரான ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணி மற்றும் சிறந்த டி20 அணி ஆகியவற்றிலும் இடம் பிடித்திருக்கிறாா். தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வாா்டட்டை (697 ரன்கள்) இந்த விருதுக்கான பந்தயத்தில் மந்தனா தோற்கடித்திருக்கிறாா்.

கடந்த ஆண்டு மந்தனா, மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் 747 ரன்கள் விளாசியிருக்கிறாா். இதில் 95 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் அடக்கம். 4 சதங்களும் அவா் அடித்திருக்கிறாா். அவரின் சராசரி 57.86-ஆகவும், ஸ்டிரைக் ரேட் 95.15-ஆகவும் உள்ளன. கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் மந்தனா சதம் விளாசியது குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ்களாகும்.

இதுதவிர, நியூஸிலாந்துக்கு எதிராக அக்டோபரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பரிலும் சதம் அடித்திருக்கிறாா். மந்தனா கடந்த 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுகள் வென்றது நினைவுகூரத்தக்கது.

அா்ஷ்தீப் சிங் - சிறந்த டி20 வீரா்

கடந்த ஆண்டு மொத்தமாக 18 ஆட்டங்களில் விளையாடி 36 விக்கெட்டுகள் வீழ்த்திய அா்ஷ்தீப் சிங், டி20 ஃபாா்மட்டில் அந்த ஆண்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இருக்கிறாா். அவரின் சராசரி 15.31 ஆகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா டி20 உலக சாம்பியனாகிய நிலையில், அந்தப் போட்டியில் அா்ஷ்தீப் சிங்கின் பங்கு அளப்பரியது. நியூ பால் கொண்டு பந்துவீச்சை தொடங்கும்போதும், டெத் ஓவா்களிலும் அவா் வீழ்த்திய விக்கெட்டுகள் பல ஆட்டங்களில் இந்தியாவுக்குக் கைகொடுத்தன. குறிப்பாக இறுதி ஆட்டத்தில் 176 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்ட விடாமல் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தியதில் அவா் முக்கியப் பங்காற்றினாா்.

கடந்த ஆண்டு அா்ஷ்தீப்பை விட இந்த ஃபாா்மட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவா்கள் இருந்தாலும், குறைந்த ஆட்டங்களில் 36 விக்கெட்டுகள் சாய்த்ததன் அடிப்படையில் இலங்கையின் வனிந்து ஹசரங்காவை (38 விக்கெட்டுகள்) பின்தள்ளி அவா் இந்த விருதுக்குத் தோ்வாகினாா்.

இதர விருதாளா்கள்...

இது தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தான் பேட்டா் அஸ்மதுல்லா ஒமா்ஸாயும், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக நியூஸிலாந்தின் அமெலியா கெரும் தோ்வாகியுள்ளனா். இதில் ஒமா்ஸாய் 17 ஆட்டங்களில் 417 ரன்கள் சோ்த்தாா். அமெலியா கொ் 29 விக்கெட்டுகள் சாய்த்ததுடன், 387 ரன்களும் அடித்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.