இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலில் இலங்கை பேட்டர்கள் முற்றிலுமாகத் தடுமாற, லோயர் மிடில் ஆர்டரில் வந்த சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா பார்ட்னர்ஷிப் அணியை சற்று மீட்டு "ஃபாலோ ஆன்' பெறும் நிலையை தவிர்த்தது.
இரண்டே ரன்கள்: இலங்கையின் காலே நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் ஆகியோரின் பங்களிப்பால் அபாரமாக ரன்கள் சேர்த்தது.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 460 ரன்கள் எடுத்திருந்த அணி, 3-ஆவது நாளான திங்கள்கிழமை கூடுதலாக 2 ரன்கள் மட்டுமே சேர்த்து, 462 ரன்களுக்கு முதல் இன்னிங்ûஸ நிறைவு செய்தது. கடைசி விக்கெட்டாக பிரசித் கிருஷ்ணா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இலங்கையின் பெüலர்களில் பிரபாத் ஜெயசூரியா 4, கேசரா நுவந்தா 3, ஆசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சுழலில் தடுமாற்றம்: பின்னர் இலங்கை தனது இன்னிங்ûஸ தொடங்க, முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா டக் அவுட் ஆனார். 2-ஆவது பந்தை அவர் லேசாக தட்டிவிட முயல, அது, ஸ்லிப்பில் நின்ற தேவ்தத் படிக்கல் கைகளில் தஞ்சமானது.
மறுபுறம் லஹிரு உதரா நிதானமாகவும், முனைப்புடனும் ரன்கள் சேர்க்க, ஒன் டவுனாக களமிறங்கிய தினேஷ் சண்டிமல் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை 7-ஆவது ஓவரில் தொடங்கிய மானவ் சுதர், முதல் பந்திலேயே சண்டிமலை சாய்த்தார். 4-ஆவது வீரராக கமிந்து மெண்டிஸ் களம் புகுந்தார்.
இந்நிலையில் மானவ் சுதர் தனது அடுத்த விக்கெட்டாக, லஹிரு உதராவை 13-ஆவது ஓவரில் வீழ்த்தினார். 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்த உதரா, பேக்வேர்டு பாய்ன்ட்டில் பந்தை தட்டிவிட்டு பவுண்டரி விளாச முயல, பந்து சற்று பவுன்ஸ் ஆனதால் அது கேட்ச்சாக மாறியது. அந்தத் திசையில் சரியாக நிற்க வைக்கப்பட்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் துல்லியமாக அந்தப் பந்தைப் பிடித்தார்.
அடுத்து கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா விளையாட வந்தார். இந்தியாவின் சுழற்பந்து தாக்குதலில் 2-ஆவது ஆயுதமாக வந்த குல்தீப் யாதவ், கமிந்து மெண்டிûஸ 16-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கமிந்து, இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் தட்டிவிட, அங்கு நின்ற கேப்டன் ஷுப்மன் கில் அபாரமாக பாய்ந்து அட்டகாசமாக அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார்.
தொடர்ந்து சோனல் தினுஷா பேட் செய்ய வர, மறுபுறம் நிதானமாக ரன்கள் சேர்த்த டி சில்வா 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். ஜடேஜா வீசிய 26-ஆவது ஓவரின் முதல் பந்தை அவர் டிஃபென்ஸ் ஆட முயல, ஸ்லிப்பில் நின்ற ராகுல் கேட்ச் பிடித்தார்.
மீட்ட கூட்டணி: இவ்வாறாக மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை 90 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, "ஃபாலோ ஆன்' பெறும் நிலையில் இருந்தது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் தினுஷாவுடன் இணைந்தார் நிரோஷன் டிக்வெல்லா.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய இந்தக் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து இலங்கையை சரிவிலிருந்து மீட்டது. இந்திய பெüலர்களுக்கு சவால் அளித்த இவர்கள் ஜோடி, அபாரமாக விளையாடி 6-ஆவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடி இருவருமே அரை சதம் கடந்தனர்.
ஒருவழியாக இந்த பார்ட்னர்ஷிப்பை பிரசித் கிருஷ்ணா 62-ஆவது ஓவரில் பிரித்தார். 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களை எட்டியிருந்த டிக்வெல்லா, விக்கெட்கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அத்துடன் இலங்கை மீண்டும் சரிவைச் சந்தித்தது.
முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த சோனல் தினுஷா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 100 ரன்களுக்கு, ஜடேஜா வீசிய 79-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.
கேசரா நுவந்தா 2, பிரபாத் ஜெயசூரியா 2 பவுண்டரிகளுடன் 10, லஹிரு குமார 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு விடைபெற, இலங்கை இன்னிங்ஸ் 284 ரன்களுக்கு நிறைவடைந்தது.
இந்திய தரப்பில் மானவ் சுதர் 4, ரவீந்திர ஜடேஜா 3, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
இத்துடன் 3-ஆம் நாள் ஆட்டம் நிறைவடைய, முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலையுடன் இருக்கும் இந்தியா, தனது 2-ஆவது இன்னிங்ஸை செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



