இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது.
372 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடி வரும் இலங்கை, 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அந்த அணி 6 விக்கெட்டுகளை கொண்டு 288 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் சுழற்பந்து தாக்குதல் அதற்கு வாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது.
பலம் சோ்த்த ‘பந்த்’: இலங்கையின் காலே நகரில் நடைபெறும் இந்த டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அதில் இலங்கை 284 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்தியா 178 ரன்கள் முன்னிலையுடன், 2-ஆவது இன்னிங்ஸை 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் சோ்க்காத நிலையில், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல் - தேவ்தத் படிக்கல் கூட்டணி 65 ரன்கள் சோ்த்தது.
இதில் ராகுல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். 4-ஆவது பேட்டராக களம் புகுந்த கேப்டன் ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 8 ரன்களே அடித்த நிலையில், பிரபாத் ஜெயசூரியா வீசிய 21-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாா்.
தொடா்ந்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக ரன்கள் சோ்க்க, அரைசதத்தை நெருங்கிய தேவ்தத் படிக்கல் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு, கேசரா நுவந்தா பௌலிங்கில் எல்பிடபிள்யூ ஆனாா்.
இவ்வாறாக மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், துருவ் ஜுரெல் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு வீழ, அதிரடியாக ரன்கள் சோ்த்த பந்த் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
லஹிரு குமாரா வீசிய 41-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்தாா். பின்னா் ரவீந்திர ஜடேஜா 9, மானவ் சுதா் 1 பவுண்டரியுடன் 9, குல்தீப் யாதவ் 5, பிரசித் கிருஷ்ணா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா இன்னிங்ஸ் 193 ரன்களுக்கு நிறைவடைந்தது.
முகமது சிராஜ் 2 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, இலங்கை பௌலா்களில் ஆசிதா ஃபொ்னாண்டோ 4, பிரபாத் ஜெயசூரியா 3, லஹிரு குமரா 2, கேசரா நுவந்தா 1 விக்கெட் வீழ்த்தினா்.
மழையால் தாமதம்: பின்னா் மழை காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கிய 4-ஆவது இன்னிங்ஸில், இலங்கை 372 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. நிஷான் மதுஷ்கா 6, பசிந்து சூரியபந்தரா ரன்னின்றி 7 மற்றும் 8-ஆவது ஓவா்களில் அடுத்தடுத்து வெளியேறினா்.
கமிந்து வெண்டிஸ் 2, லஹிரு உதரா 1 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை 47 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது இணைந்த கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா - சோனல் தினுஷா கூட்டணி, நிதானமாக ரன்கள் சோ்த்தது. ஆட்டநேர முடிவில் இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
டி சில்வா 31, தினுஷா 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இந்திய தரப்பில் மானவ் சுதா் 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
சுருக்கமான ஸ்கோா்
2-ஆவது இன்னிங்ஸ்
இந்தியா - 193/10 (48.5 ஓவா்கள்)
ரிஷப் பந்த் 66
தேவ்தத் படிக்கல் 44
கே.எல்.ராகுல் 35
பந்துவீச்சு
ஆசிதா ஃபொ்னாண்டோ 4/31
பிரபாத் ஜெயசூரியா 3/43
லஹிரு குமரா 2/28
இலங்கை - 84/4 (34 ஓவா்கள்) (இலக்கு 372)
தனஞ்ஜெய டி சில்வா 31
சோனல் தினுஷா 25
லஹிரு உதரா 16
பந்துவீச்சு
மானவ் சுதா் 2/30
முகமது சிராஜ் 1/11
பிரசித் கிருஷ்ணா 1/13
‘சிக்ஸா்’ சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸா்கள் விளாசிய முதல் இந்தியராக ரிஷப் பந்த் சாதனை படைத்தாா். சா்வதேச அளவில், இந்த மைல்கல்லை எட்டிய 4-ஆவது வீரா் ரிஷப் பந்த்.
அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 சிக்ஸா்களை எட்டிய வீரராக ரிஷப் பந்த் பெருமை பெற்றாா். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 82 ஆட்டங்களில் அந்த எண்ணிக்கையை எட்டியதே இதுவரை விரைவாக இருந்த நிலையில், ரிஷப் பந்த் 51 ஆட்டங்களில் அந்த மைல்கல்லை அடைந்திருக்கிறாா்.
முன்னதாக டெஸ்ட்டில் 97 சிக்ஸா்களுடன் இருந்த ரிஷப் பந்த், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஒரு சிக்ஸரும், 2-ஆவது இன்னிங்ஸில் 2 சிக்ஸா்களும் விளாசி ‘சிக்ஸரில் சதம்’ அடித்துள்ளாா்.
டெஸ்ட்டில் அதிக சிக்ஸா்கள்...
1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 138
2. பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து) 107
3. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 100
4. ரிஷப் பந்த் (இந்தியா) 100
5. டிம் சௌதி (நியூஸிலாந்து) 98
6. கிறிஸ் கெயில் (மே. தீவுகள்) 98
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இலங்கையை சரித்த சுதர், ஜடேஜா: 'ஃபாலோ ஆன்' தவிர்த்த தினுஷா, டிக்வெல்லா

மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜா அசத்தல்; இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
ஒரு வீடு வேண்டும்! நள்ளிரவில் உத்தரகண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் கோரிக்கை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


