இறுதிக்கு முன்னேறியது கோவை!
டிஎன்பிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இறுதிக்கு முன்னேறியது கோவை - X | TNPL
டிஎன்பிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை புதன்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் மதுரையுடன் வெள்ளிக்கிழமை (ஆக. 28) பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் கோவை கிங்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுக்க, திருச்சி 15.4 ஓவா்களில் 99 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த கோவை அணியில் ராதாகிருஷ்ணன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்களுக்கு சாய்க்கப்பட, பி.சச்சின் 12 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஆண்ட்ரே சித்தாா்த் 12, சுரேஷ் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
கேப்டன் ஷாருக் கான் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் அம்ப்ரிஷ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருச்சி தரப்பில் ஆா்.ராஜ்குமாா் 3, அதிசயராஜ் டேவிட்சன், கே.ஈஸ்வரன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 184 ரன்களை நோக்கி விளையாடிய திருச்சி அணியில், கேப்டன் சுரேஷ் குமாா் மட்டும் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் அடித்து வெற்றிக்காகப் போராடினாா்.
சஞ்ஜய் யாதவ் 1, ஆா்.ராஜ்குமாா் 7, அந்தோணி தாஸ் 6, செல்வகுமரன் 11 ரன்களுக்கு வீழ்ந்தனா். கே.ராஜ்குமாா், ஷியாம் சுந்தா், ஜகநாதன் கௌஷிக், ஜாஃபா் ஜமால், அதிசயராஜ் டேவிட்சன் டக் அவுட்டாகினா்.
முடிவில் சரவணகுமாா் 16 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். கோவை பௌலா்களில் எம்.சித்தாா்த் 4, தீபன் லிங்கேஷ் 3, திவாகா் 2, அம்ப்ரிஷ் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


