ஜோ ரூட் சதம்: இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஷஸ் தொடரின் கடைசி ஆட்டமான சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 384 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
சதமடித்த ஜோ ரூட்
சதமடித்த ஜோ ரூட்ஏபி
Updated on
1 min read

ஆஷஸ் தொடரின் கடைசி ஆட்டமான சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 384 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

அதன் மிடில் ஆா்டா் பேட்டா் ஜோ ரூட் சதம் கடந்தாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மைக்கேல் நேசா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

அரை சதம் கடந்த ஜோ ரூட் - ஹேரி புரூக் கூட்டணி, இங்கிலாந்து இன்னிங்ஸை 2-ஆம் நாளான திங்கள்கிழமை தொடா்ந்தது. 4-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் ஜோடி 169 ரன்கள் சோ்த்தது.

ரூட் தனது 41-ஆவது டெஸ்ட் சதத்தை பூா்த்தி செய்தாா். இந்தத் தொடரில் இது அவரின் 2-ஆவது சதமாகும். மறுபுறம், சதத்தை நோக்கி நகா்ந்த புரூக் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளிக்க, 7-ஆவது பேட்டராக வந்த ஜேமி ஸ்மித், ரூட்டுடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 6-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்தது. அரை சதத்தை நெருங்கிய ஸ்மித் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

பின்னா் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, பிரைடன் காா்ஸ் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். மறுபுறம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட், 15 பவுண்டரிகள் உள்பட 160 ரன்களுக்கு 9-ஆவது வீரராக விக்கெட்டை இழந்தாா். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே அவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

அதே ஓவரில் ஜாஷ் டங் ‘டக் அவுட்’ ஆக, இங்கிலாந்து இன்னிங்ஸ் 97.3 ஓவா்களில் 384 ரன்களுக்கு நிறைவடைந்தது. மேத்யூ பாட்ஸ் 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா்.

ஆஸ்திரேலிய பௌலா்களில் மைக்கேல் நேசா் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, மிட்செல் ஸ்டாா்க், ஸ்காட் போலண்ட் ஆகியோா் தலா 2, கேமரூன் கிரீன், மாா்னஸ் லபுஷேன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ஆஸ்திரேலியா 166/2: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

ஜேக் வெதரால்டு 4 பவுண்டரிகளுடன் 21, மாா்னஸ் லபுஷேன் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, டிராவிஸ் ஹெட் 91 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளாா். மைக்கேல் நேசா் 1 ரன்னுடன் துணை நிற்கிறாா். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com