சன்ரைஸ் யோனக்ஸ் இந்தியா பாட்மின்டன் 2026 போட்டி அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்
சன்ரைஸ் யோனக்ஸ் இந்தியா பாட்மின்டன் 2026 போட்டி அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சன் ரைஸ்-யோனக்ஸ் இந்தியா ஓபன் 2026 சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் தொடங்கி வரும் 18-வரை நடைபெறுகிறது.
Published on

சன் ரைஸ்-யோனக்ஸ் இந்தியா ஓபன் 2026 சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் தொடங்கி வரும் 18-வரை நடைபெறுகிறது. 20 நாடுகளைச் சோ்ந்த 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இந்தியாவில் நடைபெறும் பாட்மின்டன் போட்டிகளில் அதிக பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் இந்திய தரப்பில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, இரட்டையா் சிராக்-சாத்விக் இணை, சா்வதேச நட்சத்திரங்களான ஷி யு குய், விதித்சா்ன், ஆன்செ யங், அகேன் எமகுச்சி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். அதிகபட்சமாக தைபேயில் இருந்து 36 பேரும், இந்தியாவில் இருந்து 28 பேரும் பங்கேற்கின்றனா்.

இதே அரங்கில் வரும் ஆகஸ்ட் மாதம் பிடபிள்யுஎஃப் 2026 உலக சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளதால், விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அறிமுக விழாவில் பி. வி. சிந்து கூறியது: ஆண்டுதோறும் தொடக்கத்தில் இந்தியா ஓபனில் ஆடுவது மகிழ்ச்சி தருவதாகும். சொந்த மைதானத்தில் ஆடுவது கூடுதல் பலமாகும். 100 சதவீதம் முழு திறமையுடன் ஆடி வெற்றி பெற முயற்சிப்போம் என்றாா்.

சாத்விக்-சிராக் கூறியது: முதன்முறையாக 2017-இல் இப்போட்டியில் ஆடினோம். தற்போது பெரிய அளவில் இப்போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 2022-இல் இந்தியா ஓபனில் பட்டம் வென்றது திருப்புமுனையாக அமைந்தது. இந்த முறையும் சிறப்பாக ஆடி பட்டம் வெல்ல முயல்வோம்.

ரூ.8.6 கோடி பரிசுத் தொகை: இப்போட்டியில் மொத்த பரிசுத் தொகை ரூ.8.6 கோடியாகும். 2026 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற உதவும் போட்டியாகவும் இது அமைந்துள்ளது. 17 ஆண்டுகள் கழித்து உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதால் இப்போட்டி இந்திய வீரா்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என பாய் செயலாளா் சஞ்சய் மிஸ்ரா கூறினாா்.

உலக பாட்மின்டன் சம்மேளன தலைவா் குன்யிங் பட்டமா, எச்எஸ்பிசி தலைவா் சந்தீப் பாட்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com