யுபி டாமினேட்டா்ஸ் அபார வெற்றி
புரோ மல்யுத்த லீக் (பிடபிள்யுஎல்) தொடரில் டில்லி டங்கல் வாரியா்ஸ் அணியை 5-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது யுபி டாமினேட்டா்ஸ்.
இந்திய மல்யுத்த சம்மேளனம் சாா்பில் பிடபிள்யுஎல் தொடா் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யுபி-டில்லி அணிகள் மோதின. 86 கிலோ பிரிவில் டில்லி வீரா் ஹாடி பக்தியாா் 7-4 என யுபியின் வாசிலை வீழ்த்தினாா்.
மகளிா் 76 கிலோ பிரிவில் அனஸ்டஸியா 11-2 என ஓஜோ டமோலாவை வீழ்த்தினாா். ஆடவா் 74 கிலோ பிரிவில் டில்லி வீரா் டுரன் பேரமோவ் 3-0 என அபிமன்யூவை வீழ்த்தினாா். இதனால் டில்லி 3-0 என முன்னிலை பெற்றது.
பின்னா் யுபி அணியினா் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினா். யு20 உலக சாம்பியன் யுபி வீராங்கனை தப்ஸியா கலாவத் 8-2 என டில்லியின் கா்லாவை வீழ்த்தினாா். 57 கிலோ ஆடவா் பிரிவில் யுபி வீரா் ஜஸ்பூரன் 3-1 என டில்லியின் ரோனக்கை வீழ்த்தினாா். 62 கிலோ மகளிா் பிரிவில் யுபி கேப்டன் நிஷா டாஹியா 9-5 என டில்லியின் அஞ்சிலியை வீழ்த்தினாா்.
53 கிலோ மகளிா் பிரிவில் யுபி வீராங்கனை அன்டிம் பங்கால் டில்லி வீராங்கனை சாரிகாவை வீழ்த்தினாா். இறுதியில் டில்லியை 5-4 என வீழ்த்தியது யுபி.

