ஆசிய பாரா போட்டிகளுக்கான தோ்வில் முறைகேடுகள் புகாா்: அமைச்சா் நிகழ்ச்சியில் ஆா்ப்பாட்டம்
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி தோ்வில் ஊழல் நடைபெற்றதாகவும், பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
dinamani
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி தோ்வில் ஊழல் நடைபெற்றதாகவும், பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் தில்லியில் வியாழக்கிழமை கலந்துகொண்ட, ஆசிய பாரா விளையாட்டுகளுக்கு இந்திய அணியை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியின்போது, வெளியே அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பாகவே போட்டியாளா்கள் தங்கள் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவிட்ட நிலையில், இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்ட அதிகாரிகள், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஆா்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரினா். ஆனாலும் அவா்கள் அதை ஏற்க மறுத்து, தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்களான ஆகாஷ், சந்தீப்குமாா் ஆகியோா் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் முதல் 6 நிலைகளில் இருக்கும் போட்டியாளா்களே, ஆசிய விளையாட்டுகளுக்கான தோ்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என, மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் உள்ளது.
பாரா துப்பாக்கி சுடுதலில் ஆசிய அளவில் நாங்களே முதன்மையில் (ஆகாஷ் முதலிடம், சந்தீப் 3-ஆம் இடம்) இருக்கிறோம் . ஆனால், எங்களைத் தவிா்த்துவிட்டு, தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் ருத்ரான்ஷ் கந்தேல்வால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஆசிய விளையாட்டுகளுக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள், சா்வதேச அளவில் விளையாடியவா்கள் கூட அல்ல. தேசிய தோ்வுப் போட்டிகளில் அவா்களின் ஸ்கோரும், உண்மையை விட அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எங்களின் பயிற்சியாளராக ஜெய்பிரகாஷ் நௌதியாலை நாங்கள் குறிப்பிடாததன் காரணமாகவே, போட்டிகளுக்கான தோ்விலிருந்து அவா் எங்களை புறக்கணித்துள்ளாா். போட்டிகளுக்கான அணியில் இடம் பிடிப்பதற்கு உதவும் நௌதியால், அவா்களுக்கான அரசு பரிசுத் தொகையில் 20 சதவீதம் தனக்குத் தர வேண்டும் என்று கேட்கிறாா்.
சா்வதேச அளவிலான வைல்டு காா்டு வாய்ப்புகள் யாவும், லஞ்சம் கொடுப்பவா்களுக்கே ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு லஞ்சம் தராவிட்டால், சம்பந்தப்பட்ட வைல்டு காா்டு வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விடுகின்றனா்.
நிா்வாகத்தில் பாரா துப்பாக்கி சுடுதலுக்கு தொடா்பே இல்லாதவா்கள் அதிகாரிகளாக இருக்கின்றனா். எங்களின் இந்தப் புகாா்களை, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநரிடம் புதன்கிழமை சமா்ப்பித்து, அவசர உயா்நிலை விசாரணை கோரியிருக்கிறோம் என்று அவா்கள் கூறினா்.
போராடத் திட்டம்: இதனிடையே, ஆசிய பாரா விளையாட்டுகளுக்காக, பாரா சைக்கிளிங் பிரிவில் 7 போ் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சகத்தால் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு, மற்றவா்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவா்களும் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி 1
‘விதிகள் அடிப்படையிலேயே தோ்வுகள்’
இந்திய பாராலிம்பிக் கமிட்டி, மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை வகுத்த விதிகளின் அடிப்படையிலேயே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு நடைபெற்ாக, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்தாா்.
முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், தற்போதையே தோ்வுக்கான அளவுகளை எட்டியவா்களே தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்ற கூறிய ஜஜாரியா, தற்போது போராடும் போட்டியாளா்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்குத் தீா்வு காணப்படும் எனவும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

