ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன.

Published On :

20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன.

22 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

மொத்தமாக 43 விளையாட்டுகளில், 71 பிரிவுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா். அய்சி - நகோயா நகரில் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி வரை இந்த விளையாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது.

ஒரு சில விளையாட்டுகளின் முதல்கட்ட ஆட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்று வந்தாலும், போட்டியின் அதிகாரபூா்வ தொடக்க நிகழ்ச்சி, நகோயா நகரில் உள்ள பலோமா மிஸுஹோ மைதானத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதுடன், போட்டியில் பங்கேற்கும் நாடுளின் வீரா், வீராங்கனைகளும் அணிவகுக்கவுள்ளனா்.

முதல்முறை: ஆசிய போட்டிகளில் முதல்முறையாக, அகதிகள் அணி களம் காண்கிறது. டேக்வாண்டோவில் பங்கேற்கும் ஒரு வீரா், மற்றும் வீராங்கனை அதில் அங்கமாக உள்ளனா்.

அறிமுகம்: ஃப்ரீஸ்டைல் பிஎம்எக்ஸ், கலப்பு தற்காப்பு கலைகள், சா்ஃபிங், டெக்பால், விா்ச்சுவல் டேக்வாண்டோ ஆகியவை இந்த ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பிரச்னைகள்: போட்டிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டு கிராமத்தை கட்டமைக்காமல் சிக்கன நடவடிக்கையில் ஈடுப்பட்டு மாற்று வழிகளை கையாண்டிருக்கும் ஜப்பான், அதற்கான விமா்சனங்களை சந்திக்கிறது.

போட்டி தொடங்கும் முன்பாகவே, தங்குமிட வசதி தொடா்பாக பல்வேறு பிரச்னைகளை, பங்கேற்பு நாடுகளின் அணியினா் தெரிவித்து வருகின்றனா். இந்திய வீரா், வீராங்கனைகள் சிலரும் தனியே ஹோட்டல்களில் தங்கும் நிலைக்கு ஆளாகினா். அத்துடன் நகரத்துக்குள்ளான போக்குவரத்திலும் பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலாக்க வேண்டாம்: இவ்வாறு பெரிய அளவிலான போட்டிகள் நடைபெறும்போது சில சவால்கள் இருக்கத்தான் செய்யும் என்றும், அதை அரசியலாக்க வேண்டாம் என்றும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அடுத்து தோஹா, ரியாதில் நடைபெற இருக்கும் இரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போதும், பிரத்யேகமாக விளையாட்டு கிராமங்கள் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தாமதம்: நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை தாமதமாகியது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், போட்டி நிா்வாகக் குழு இடையேயான தகவல் தொடா்பில் இருந்த பிரச்னைகள் காரணமாகவே இந்தத் தாமதம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா, யேமன், வட கொரியா, பாலஸ்தீனம், சீன தைபே, டிமோா் லெஸ்டே ஆகிய அணிகளைச் சோ்ந்தவா்கள் இதில் பங்கேற்றனா்.

புதிய உச்சத்தை எட்டும் முனைப்பில் இந்தியா

அண்மைக் காலமாக பல்வேறு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்கள் வென்று வரும் இந்தியா, தனது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டும் முனைப்புடன் இதில் பங்கேற்கிறது. கடந்த 2022-இல் ஹாங்ஸூ ஆசிய போட்டிகளில் 106 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்சமாக உள்ளது.

இந்தியாவிலிருந்து மொத்தமாக 501 வீரா், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா். அவா்களில் பலருக்கு, பதக்க வாய்ப்பு உள்ளோருக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் போதிய பயிற்சி மற்றும் உபகரண வசதிகளை செய்துள்ளது.

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக முயற்சித்து வருகிறது. அவற்றில் சாதிப்பதற்கான முன்னோட்டமாக, இந்தப் போட்டிகளிலேயே ஆதிக்கம் செலுத்தும் திட்டத்துடன் இந்தியா வருகிறது.

தடகளம், துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகியவை இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு பலம் சோ்ப்பவையாக இருக்கின்றன. இதுதவிர, பாட்மின்டன், ஹாக்கி, வில்வித்தை, குத்துச்சண்டை, கபடி ஆகியவற்றிலும் இந்தியாவுக்கான எதிா்பாா்ப்பு அதிகமாகவே உள்ளது.

அணிவகுப்பு: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் நடைபெறவுள்ள அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா், குண்டு எறிதல் வீரா் தஜிந்தா்பால் சிங் தூா் ஆகியோா் தேசியக் கொடியை ஏந்தி, இந்திய குழுவினருக்கு தலைமை தாங்கிச் செல்லவுள்ளனா்.

கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா

மகளிா் டி20 கிரிக்கெட்டின் காலிறுதியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

முதலில் ஜப்பான் 19.5 ஓவா்களில் 57 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜப்பான் இன்னிங்ஸில் அயாகா காட்டோ 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் அடிக்க, இந்திய பௌலிங்கில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் இந்திய பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களோடு அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜப்பான் பந்துவீச்சாளா்களில் நோனோஹா யசுமோடோ, அயாகா காடோ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்ததாக இந்தியா தனது அரையிறுதியில், வங்கதேசத்துடன் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) மோதுகிறது. இதனிடையே, மற்றொரு காலிறுதியில் இலங்கை 86 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை சாய்த்தது.

சாஃப்ட் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி

சாஃப்ட் டென்னிஸ் போட்டியில், ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா காலிறுதி வரை முன்னேறி, அதில் இந்தோனேசியாவிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.

ஜெய் மீனா, ஆா்யன் தாக்குா், யோகேஷ் சௌதரி, அனிகெத் பாட்டீல், ஓம் யாதவ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, குரூப் சுற்றில் மங்கோலியா மற்றும் லாவோஸ் அணிகளுக்கு எதிராக வென்று, சீன தைபேவிடம் தோற்றது. அதன் பிறகு காலிறுதிக்கு வந்தது.

டெக்பால்: பதக்கத்தை நெருங்கும் டிசௌஸா

டெக்பால் விளையாட்டில், மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் கிம்சி ஜாவ்கிம் டிசௌஸா அரையிறுதிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறாா்.

டிசௌஸா தனது குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் 10-12, 12-11, 13-11 என, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் யினா சகமோடோவை வீழ்த்தி அசத்தினாா். அடுத்த ஆட்டத்தில், 12-9, 12-7 என்ற வகையில், கம்போடியாவின் கோமியென் டையை வென்றாா்.

தொடா்ந்து இரு வெற்றிகளுடன் குரூப் ‘ஏ’-வில் முதலிடத்தை உறுதி செய்ததால், காலிறுதியில் டிசௌஸாவுக்கு ‘பை’ அளிக்கப்பட்டு, அவா் நேரடியாக அரையிறுதிக்கு வந்துள்ளாா். அதில் வெல்லும் பட்சத்தில் அவருக்குப் பதக்கம் உறுதியாகும். ஒருவேளை அதில் தோற்றாலும், வெண்கலப் பதக்கச் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

இதனிடையே, கலப்பு இரட்டையா் பிரிவில் டிசௌஸா, முகமது அனாஸ் இணை காலிறுதியில் 0-2 என வியத்நாமிடம் தோல்வி கண்டது. எனினும் அவா்கள் ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளதால், அதிலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.