
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 492 விளையாட்டு வீரர்களுக்கு இந்தியா ஒப்புதல்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் வருகிற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன.
இந்திய ஒலிம்பிக் சங்கம் - கோப்புப் படம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயாவில் வருகிற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. இதில், இந்தியா சார்பில் பங்கேற்க 492 விளையாட்டு வீரர்களுக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கிய பட்டியலில் சில விளையாட்டுகளில் வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் ஆசிய அளவிலான தரவரிசை மற்றும் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இது இறுதியான பட்டியல் அல்ல என்றும், இன்னும் சில நாள்களில் கூடுதலாக 25 முதல் 30 வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்களில் 265 ஆண்கள், 227 பெண்கள் உள்ளனர்.
மல்யுத்தம் மற்றும் பளுதூக்குதல் விளையாட்டுகள் ஊக்கமருந்து பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. பளுதூக்குதலில் ஆரம்பத்தில் இருந்த 10 வீரர்கள் பட்டியல் இதனால், 5 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது. மல்யுத்தத்திலும் சமீபத்தில் ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஜூடோ விளையாட்டில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜூடோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு மேலும் 2 வீரர்களின் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை வைத்தது. ஆனால், தனிநபர் போட்டிகளில் ஆசிய அளவில் முதல் 6 இடங்களிலும், குழுப் போட்டிகளில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்களை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறையை இந்திய ஒலிம்பிக் சங்கமும், விளையாட்டுத் துறை அமைச்சகமும் கடுமையாகப் பின்பற்றியுள்ளன.
தடகளத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருமுறை பதக்கங்கள் வென்ற நீரஜ் சோப்ரா தலைமையில் 73 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களைப் கொண்ட பிரிவாக இது அமையக்கூடும். ஆசிய அளவில் தங்கம் வெல்லும் வாய்ப்புள்ள பல முன்னணி தடகள வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், தடகளத்தில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் வர வாய்ப்புள்ளது.
நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுப் பிரிவுகளில் 12 பேர் கொண்ட ஆண்கள் அணியும், ஜூடோ மற்றும் டேக்வாண்டோ பிரிவுகளில் தலா 3 பேர் கொண்ட பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளன.
கலப்பு தற்காப்பு கலை பிரிவில் ஒரு பெண் வீராங்கனை மட்டுமே உள்ளார். அடுத்தப் பட்டியலில் மேலும் பெயர்கள் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. சர்ஃபிங் விளையாட்டில் நீதிமன்ற வழக்கு நடப்பதால் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. வழக்கு முடிந்ததும் பெயர்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா அதிகளவு பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு விளையாட்டு துப்பாக்கி சுடுதல். இதில், 15 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் என மொத்தம் 30 பேர் பங்கேற்கவுள்ளனர். பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ள மற்றொரு விளையாட்டான ஸ்குவாஷில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 4 பேர் கலந்துகொள்கின்றனர்.
வில்வித்தையில், தீரஜ் பொம்மதேவரா தலைமையிலான அணியில் 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 6 பேர் 'காம்பவுண்ட்' வகை வில்வித்தை வீரர்கள். வாள்வீச்சில் 8 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.
குத்துச்சண்டை விளையாட்டும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் அதில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 11 பேர் பங்கேற்கின்றனர்.
Summary
Asian Games: India approves 492 athletes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




