வெளிநாட்டு வெற்றிகளும் புதிய சாதனைகளும்: இந்திய டி20 அணி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?

வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் இந்தப் பெருமை இல்லை. 
வெளிநாட்டு வெற்றிகளும் புதிய சாதனைகளும்: இந்திய டி20 அணி கேப்டனாக விராட் கோலி சாதித்தது என்ன?

டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக விராட் கோலியின் பயணம் நிறைவடைந்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியடைந்தது. எனினும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. இனிமேல் டி20 கிரிக்கெட்டில் புதிய கேப்டனின் தலைமையின் கீழ் இந்திய அணி விளையாடவுள்ளது.

ஒரு வீரராக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று அணியின் வெற்றிகளுக்குப் பங்களிப்பேன், புதிய கேப்டனுக்கு உதவியாக இருப்பேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக உள்ள விராட் கோலி, டி20 உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பது உண்மையிலேயே இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு தான்.

2017-ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் விராட் கோலி. தோனி கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து கேப்டன் பதவி கோலிக்கு வழங்கப்பட்டது. முதல் டி20 தொடரை 2-1 என வென்றார் கோலி. இதன்பிறகு அவர் டி20 கேப்டனாகப் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

* கோலியின் தலைமையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளது. வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் இந்தப் பெருமை இல்லை. 

* கோலி தோற்ற டி20 தொடர்கள் மிகக்குறைவு தான். 2017-ல் மே.இ. தீவுகளில் கேப்டனாகத் தனது 2-வது டி20 தொடரில் 1-0 (1) எனத் தோற்றார் கோலி. 2019-ல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியா, 2-0 (2) என டி20 தொடரை வென்றது. அவ்வளவுதான். ஒரு டி20 கேப்டனாக 2 தொடர்களில் மட்டுமே தோற்றுள்ளார் கோலி. 

* 2019-ல் நியூசிலாந்து சென்று விளையாடிய 5 டி20 ஆட்டங்களிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

* 2020-ல் ஒருநாள் தொடரில் தோற்றாலும் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்று அசத்தியது இந்திய அணி.

* இந்த வருடம் வலுவான இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் 3-2 என வென்றது இந்திய அணி. 

* குறைந்தது 40 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர்களில் அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்ட கேப்டன்களில் விராட் கோலிக்கு 2-ம் இடம். 

* டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கோலிக்கு 2-ம் இடம். 47 இன்னிங்ஸில் 1570 ரன்கள். சராசரி - 47.57. 13 அரை சதங்கள்.

அதிக வெற்றி சதவீதம் (குறைந்தது 40 ஆட்டங்கள்)

வெற்றி% - கேப்டன் (ஆட்டங்கள் - வெற்றி - தோல்வி - டை - முடிவு இல்லை)

81.73% - அஷ்கர் ஆப்கன் (52-42-9-1-0)
64.58% - விராட் கோலி (50-30-16-2-2)
61.76% - மார்கன் (69-41-25-2-1)
61.25% - டு பிளெஸ்சிஸ் (40-24-15-1-0)
61.11% - டேரன் சமி (47-27-17-1-2)
59.28% - தோனி (72-41-28-1-2)

டி20 கிரிக்கெட்டில் சிறந்த வெற்றி/தோல்வி விகிதம் (குறைந்தது 30 ஆட்டங்கள்)

4.200 - அஷ்கர் ஆப்கன் (42/10)
3.625 - சர்ஃபராஸ் அகமது (29/8)
2.500 - பாபர் ஆஸம் (20/8)
2.000 - விராட் கோலி (32/16)
1.720 - இயன் மார்கன் (43/25) 

(சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற ஆட்டங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com