7-ம் இடத்தில் இருந்து உலகக் கோப்பை இறுதிச்சுற்று: ஆஸ்திரேலியா சாதித்தது எப்படி?

டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணியின் நிலைமை மேலும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 
7-ம் இடத்தில் இருந்து உலகக் கோப்பை இறுதிச்சுற்று: ஆஸ்திரேலியா சாதித்தது எப்படி?

மே 2020. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நெ.1 அணி. முதல்முறையாக. 

அக்டோபர் 2021. டி20 தரவரிசையில் 7-ம் இடம்.

நவம்பர் 14. உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக மோதுகிறது.

கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வி. அதே அணி தான் இன்று டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது!

இந்தத் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவும் தொடர்களை வென்று சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதால் நெ. 1 இடத்துக்கு ஆஸ்திரேலிய அணியால் உயர முடிந்தது.  அதற்குப் பிறகுதான் தடுமாற்றம் ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, மே.இ. தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளிடம் தோற்றது. சொந்த மண்ணிலும் இந்தியாவிடம் தோற்றது. தொடர்ந்து 5 டி20 தொடர்களில் தோல்வி. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு கடைசியாக விளையாடிய 21 ஆட்டங்களில் 6-ல் தான் வெற்றி. டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணியின் நிலைமை மேலும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

ஆஸி. டி20 அணியின் சமீபத்திய சறுக்கல்களுக்குச் சில காரணங்களும் உண்டு. கடந்த வருட செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது தான் அனைத்து முக்கிய ஆஸி. வீரர்களும் டி20 தொடரில் இடம்பெற்றார்கள். அதன்பிறகு பல தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. 4 தொடர்களில் வார்னர், கம்மின்ஸ் விளையாடவில்லை. 3-ல் ஸ்மித் விளையாடவில்லை. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் கடைசி இரு தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்த வருட டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தான் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரும் முதல்முறையாக டி20 ஆட்டத்தில் ஒன்றாக விளையாடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே 5 டி20 தொடர்களில் தோற்றதற்கு முக்கிய வீரர்கள் அணியில் பங்கேற்காததை முக்கியக் காரணமாகச் சொல்லலாம். 

2019-20-ல் நெ.1 அணியாக இருந்தபோது 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி அந்த உயரத்தை ஆஸி. அணி எட்டியது. ஆனால் இம்முறை திட்டத்தை மாற்றினார் கேப்டன் ஃபிஞ்ச். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏழு பேட்டர்கள், 4 பிரதான பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஆகிய மூவரும் இணைந்து நான்கு ஓவர்களை வீசி முடிப்பார்கள் என்று போட்டி ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் மேக்ஸ்வெல் 3 ஓவர்களையும் மார்ஷ் 1 ஓவரையும் வீசினார்கள். இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து பெரிய பாதிப்பில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இதுபோன்ற சரியான திட்டமிடல்களுடன்தான் உலகக் கோப்பையில் ஆஸி. அணி விளையாடியது. 

ஃபார்மில் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியை ஆட வந்த வார்னர், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளார். 6 ஆட்டங்களில் 236 ரன்கள். ஸ்டிரைக் ரேட் - 148.42. இதனால் ஆஸி. அணியின் பெரிய சிக்கல் தீர்ந்தது.

ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணி, இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இதுவரை நான்கு முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2010-ல் 2-ம் இடம். முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று கணக்கைத் தொடங்குமா ஆஸி. அணி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com