டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணிக்கு உதவுமா பாகிஸ்தான்?

இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணிக்கு உதவுமா பாகிஸ்தான்?

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்ற இந்திய அணி, ஞாயிறன்று நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு முன்பு பாகிஸ்தான் அணி நமக்கு ஓர் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

ஷார்ஜாவில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

காரணம், பாகிஸ்தானை நியூசிலாந்து வென்று அடுத்ததாக இந்தியாவையும் வென்றுவிட்டால் அவ்வளவுதான். இந்திய அணியால் அரையிறுதிக்கு நுழைவது அவ்வளவு எளிதாக இருக்காது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய மூன்று அணிகளையும் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் வீழ்த்தி விடும் என வைத்துக்கொள்வோம். (சமீபமாக ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்த மூன்று முன்னணி அணிகளையும் வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.)

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட இந்தியா, பிறகு நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தால் என்ன ஆகும்? மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் பலன் இருக்காது. நியூசிலாந்தும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கும். 

இன்று பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தி பிறகு இந்தியாவையும் தோற்கடித்துவிட்டால் என்ன ஆகும்?

பாகிஸ்தானும் நியூசிலாந்தும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகள் தான் அதிகமாகும். இதைத் தடுக்க ஒரே வழி.

இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வெல்லவேண்டும். இதன்பிறகு நியூசிலாந்தை இந்தியா வென்றுவிட்டால் அரையிறுதிக்குச் செல்லும் வழி சற்று சுலபமாகிவிடும்.

சரி இன்று பாகிஸ்தானிடம் தோல்வியடையும் நியூசிலாந்து, ஞாயிறன்று இந்தியாவை வென்றுவிட்டால்?

6 அணிகள் கொண்ட பிரிவில் இரு தோல்விகளை அடைந்து மீதி மூன்று ஆட்டங்களில் இந்தியா வென்றாலும் நியூசிலாந்து அணி 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு நுழைந்துவிடும். 

சரி, பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்துகிறது என வைத்துக்கொள்வோம். பிறகு இந்தியாவிடம் தோல்வியடைந்தால்?

மூன்று முன்னணி அணிகளும் 4 வெற்றிகளுடன் சம அளவில் இருக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். அப்போது ரன்ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒருவேளை நியூசிலாந்து பாகிஸ்தானை முதலில் வீழ்த்தி பிறகு இந்தியாவையும் வீழ்த்தினால்? அப்போதும் இந்தியாவுக்குக் கஷ்டம் தான். இந்திவை முதலில் தோற்கடித்ததால் பாகிஸ்தான் 4 வெற்றிகளுடன் நியூசிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குச் சென்றுவிடும். 

ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய மூன்று அணிகளும் ஏதாவது அதிர்ச்சி ஏற்படுத்தி பெரிய அணிகளை ஓரிரு ஆட்டங்களில் வென்றால்? அதன்பிறகு ஏற்படும் சூழ்நிலையை நம்மால் கணிக்க முடியாது. மேலே சொன்ன கணக்குகள் மாறிப்போகும். 

இதனால் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வெல்வதே இந்திய அணிக்குப் பல சாதகமான சூழல்களை உருவாக்கும். பாபர் ஆஸம் குழுவினருக்கு நம் முழு ஆதரவைத் தெரிவிப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com