
டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணி பாகிஸ்தானை வென்று அசத்தியது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 159 எடுக்க அடுத்து ஆடிய அமெரிக்காவும் 159 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவா் நடத்தப்பட்டது. சூப்பா் ஓவரை பாகிஸ்தானின் முகமது அமீா் வீச, அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா அணியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவல்கர் வீசிய ஓவரில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
குஜராத்தில் பிறந்த மோனங்க் படேல் இந்த டி20 உலகக் கோப்பையின் அமெரிக்க அணியின் கேப்டனாக இருக்கிறார். சிறப்பாக பேட்டிங், கேப்டன்சி செய்த இவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இந்த வெற்றி குறித்து அமெரிக்க கேப்டன் கூறியதாவது:
சூப்பர் ஓவருக்கு செல்லாமலேயே போட்டியை முடிக்க நினைத்தோம். அழுத்தங்களை சரியாக கையாண்டு சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்தது எங்களுக்கு பெரிய பலமாக அமைந்தது. முக்கியமான நேரங்களிலும் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. பாகிஸ்தான் அணிதான் அழுத்ததில் இருந்தது.
எங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருக்கும். பாகிஸ்தானுக்கு அதிகமாக இருக்கும் எனத் தெரியும். அதேவேளையில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் ரசிகர்கள் கூட்டம் பாகிஸ்தானுக்கு தொல்லையாக மாறும் என நினைத்தேன்.
முதல் 6 ஓவரில் நாங்கள் அற்புதமாக பந்து வீசினோம். அதனால் பாகிஸ்தான் அழுத்ததில் சென்று ரன்களை எடுக்க திணறியது எங்களுக்கு உதவியது. டாஸ் வென்று பந்துவீசுவதே திட்டம். 160 போதுமான ரன்களாக தோன்றியது. கோரி ஆண்டர்சனை கடைசி 3 ஓவரில் பயன்படுத்த வைத்திருந்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.