
பாகிஸ்தான் அணிக்குள் வீரர்கள் 3 பிரிவுகளாக செயல்பட்டதால் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் அணியாக அந்தப் பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றையப் போட்டி மழையினால் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால், அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்குள் வீரர்கள் 3 பிரிவுகளாக செயல்பட்டதால் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டார். ஆனால், அணியில் வீரர்கள் தங்களுக்குள் பிரிவுகளாக செயல்பட்டதால் அவரால் அணியை திறம்பட ஒருங்கிணைக்க முடியவில்லை. கேப்டன்ஸியை இழந்ததால் ஷகின் அஃப்ரிடி அதிருப்தியில் இருந்ததாகவும், முகமது ரிஸ்வானின் பெயர் கேப்டன் பதவிக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாததால் அவரும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணிக்குள் வீரர்கள் 3 பிரிவுகளாக இருக்கின்றனர். பாபர் அசாம் தலைமையிலான ஒரு பிரிவு, ஷகின் அஃப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் தலைமையினா இரு பிரிவுகள். வீரர்கள் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு தேவையான நேரத்தில் போட்டிகளில் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களான முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் அணியில் சேர்க்கப்பட்டது பாகிஸ்தான் அணியின் நிலையை மேலும் மோசமாக்கியது.
அணியில் உள்ள சில வீரர்கள் சக வீரர்களிடம் போட்டியின்போது பேசுவது இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்விக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தெரிந்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடம், உங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அணியாக ஒன்றிணைந்து ஒற்றுமையாக விளையாடுங்கள் என இரண்டு முறை கூறியுள்ளார். உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துங்கள், மற்ற பிரச்னைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம எனக் கூறியும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளால் அந்த அணியின் வீரர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.