உலகின் 8-வது அதிசயம் குல்பதின் நைப்; முன்னாள் வீரர் விமர்சனம்!
உலகின் 8-வது அதிசயம் குல்பதின் நைப் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் ஸ்மித் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மழையின் காரணத்தால் ஓவர் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டியில் நடைபெற்ற சம்பவம் வேடிக்கையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப், தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக பெவிலியன் திரும்பினார்.
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், மழை வருகிறது போட்டியை மெதுவாக்குங்கள் என்பதுபோல் சைகை செய்கிறார். அதன் பின்னர், உடனே தசைபிடிப்பு ஏற்பட்டதாக குல்பதின் நைப் பெவிலியன் திரும்புகிறார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறி பெவிலியன் திரும்பிய குல்பதின் நைப் 13-வது ஓவரில் மீண்டும் ஃபீல்டிங்குக்குத் திரும்பினார். அதன்பின், 15-வது ஓவரை வீசி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். இதனால், அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கிரிக்கெட் வரலாற்றில் தசைபிடிப்பு ஏற்பட்டு அடுத்த 25 நிமிடங்களுக்குள் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளரான குல்பதின் நைபை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.
அதேபோல நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் ஸ்மித், கடந்த 6 மாதங்களாக எனக்கு முழங்கால் வலி இருக்கிறது. குல்பதின் நைபின் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன். குல்பதின் நைப் தற்போது உலகின் 8-வது அதிசயமாக மாறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.