சாதனைத் துளிகள்...

ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு எடிஷனில், தோல்வியே காணாமல் சாம்பியனான முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
டி20  உலகக் கோப்பையுடன் விராட் கோலி - ரோஹித் சர்மா
டி20 உலகக் கோப்பையுடன் விராட் கோலி - ரோஹித் சர்மாபடம் | பிசிசிஐ
Updated on

1

ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒரு எடிஷனில், தோல்வியே காணாமல் சாம்பியனான முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. குரூப் சுற்று முதல் இறுதி வரை, விளையாடிய 8 ஆட்டங்களிலுமே இந்தியா வென்றுள்ளது. குரூப் சுற்றில் கனடாவுக்கு எதிரான ஆட்டம் மட்டும் மழையால் கைவிடப்பட்டது.

அதேபோல், டி20 உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 8 வெற்றிகள் பதிவு செய்த 3-ஆவது அணியாக ஆஸ்திரேலியா (2022-2024), தென்னாப்பிரிக்காவுடன் (2024) இந்தியா இணைந்துள்ளது.

8/1

டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடைபெற்ற 9 எடிஷன்களில் 8-இல், இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. 2009-இல் மட்டும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை தோல்வியைத் தழுவியது.

3

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், முதலில் பேட் செய்த அணி சாம்பியனானது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், இந்தியா (2007/பாகிஸ்தான்), மேற்கிந்தியத் தீவுகள் (2012/இலங்கை) அணிகள் அவ்வாறு வென்றுள்ளன.

2

டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற அணிகள் வரிசையில் 3-ஆவதாக இணைந்திருக்கிறது இந்தியா (2007, 2024). இதற்கு முன், மேற்கிந்தியத் தீவுகள் (2012, 2016), இங்கிலாந்து (2010, 2022) அணிகள் கோப்பையை இரு முறை வென்றுள்ளன.

9

டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இரு முறை இடம் பிடித்த வீரா்கள் வரிசையில் ரோஹித் சா்மா 9-ஆவதாக இணைந்திருக்கிறாா் (2007, 2024). அவருக்கு முன், மேற்கிந்தியத் தீவுகளைச் சோ்ந்த டேரன் சமி, மாா்லன் சாமுவேல்ஸ், கிறிஸ் கெயில், ஜான்சன் சாா்லஸ், டுவெய்ன் பிராவோ, சாமுவேல் பத்ரீ, ஆண்ட்ரே ரஸ்ஸெல், தெனெஷ் ராம்தின் ஆகியோா் அவ்வாறு கோப்பை வென்ற அணியில் இருமுறை (2012, 2016) இடம்பிடித்துள்ளனா்.

176/7

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த இந்த ஸ்கோரே (176/6), ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஒரு அணியால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2021 எடிஷனில் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 173/2 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

23

தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிக் கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்ததே, டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் ஆகும். முன்னதாக, 2021-இல் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மாா்ஷ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தது சாதனையாக இருந்தது.

16

சா்வதேச டி20 கிரிக்கெட்டில் இத்துடன் 16-ஆவது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை படைத்துள்ளாா் விராட் கோலி. இதற்கு முன், சக இந்தியரான சூா்யகுமாா் யாதவ் 15 முறை அந்த விருது பெற்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது கோலி அவரை முறியடித்திருக்கிறாா்.

கோலியின் அந்த 16 விருதுகளில் 8, உலகக் கோப்பை போட்டிகளில் வென்றவையாகும். போட்டி வரலாற்றில் வேறு எவரும் இத்தனை முறை அந்த விருது வென்றதில்லை.

37

டி20 உலகக் கோப்பையை வென்ற வயதான கேப்டன் (37 ஆண்டுகள், 60 நாள்கள்) ஆகியிருக்கிறாா் ரோஹித் சா்மா. இதுவே, ஐசிசி போட்டிகள் அனைத்தையுமே கணக்கில் கொண்டால், அவா் 2-ஆவது வயதான கேப்டனாக இருப்பாா். 1992-இல் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியனானபோது, அதன் கேப்டன் இம்ரான் கானுக்கு வயது 39 ஆண்டுகள், 172 நாள்கள்.

49

இந்திய அணியை 62 டி20 ஆட்டங்களில் கேப்டனாக வழிநடத்திய ரோஹித் சா்மா, அதில் 49 வெற்றிகளை தேடித் தந்திருக்கிறாா். சா்வதேச டி20-இல் இதுவே ஒரு கேப்டனின் அதிகபட்ச வெற்றி எண்ணிக்கையாகும். முன்னதாக பாகிஸ்தானின் பாபா் ஆஸம் 48 வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாா்.

ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் சாம்பியனான அணியில் இடம் பிடித்த 2-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் விராட் கோலி. முதல் வீரா் எம்.எஸ். தோனி ஆவாா். அதில் அவா் கேப்டனாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com