/

25 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள்: விதிமுறைகள் தெரியாமல் திண்டாடும் அரசு ஊழியர்கள்

சென்னை, நவ. 11: அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் துறை ரீதியான தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.   25 ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட தேர்வுக்கான புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:12 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, நவ. 11: அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் துறை ரீதியான தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

  25 ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட தேர்வுக்கான புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. புத்தகங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் துறை தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளவும் முடியாத நிலையுள்ளது.

  இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர, அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது, அனைத்து அரசுத் துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் லட்சணக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்காக துறை ரீதியான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பரில் நடத்தப்படும்.

  தேர்வில் இரண்டு வகை உண்டு. ஒன்று புத்தகங்களுடன்; மற்றொன்று புத்தகம் இல்லாமல் நடத்தப்படும். 76 தேர்வுகள் புத்தகங்கள் இல்லாமலும், 92 தேர்வுகள் புத்தகங்களுடனும் நடத்தப்பட்டு வருகின்றன.

  தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 28,490 பேரும், கடந்த மே மாதத்தில் 36,879 பேரும் துறை ரீதியான தேர்வுகளை எழுதினர்.

  எழுதுபொருள் மற்றும் அச்சு, கருவூலம் மற்றும் கணக்குகள், நெடுஞ்சாலை, பதிவாளர் ஜெனரல், பள்ளிக் கல்வி, மின்வாரியம், ஊரக மேம்பாடு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை தேர்வு நடத்தப்படும் முக்கிய துறைகள் ஆகும்.

  ""புத்தகங்களுடன் தேர்வு எழுதும் போது, வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். இதற்கு, தேர்வுக்கு முன்பே புத்தகத்தை திருப்பிப் பார்த்திருந்தால்தான் வசதியாக இருக்கும். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக பற்றாக்குறை உள்ளது'' என்று அரசுத் துறை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  துறை ரீதியான தேர்வுகளில் அந்தத் துறை குறித்த விதிமுறைகள், சட்டங்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களே இப்போது புழக்கத்தில் உள்ளதால் பழைய விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமாவது இல்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

  ""தேர்வுக்கான அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது 25 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளன. அதிலுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. பணியில் ஏற்படும் தவறுகளுக்காக பலரும் தண்டிக்கப்படுவது விதிமுறைகள் தெரியாததால் தான்'' என்றும் அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

செயலாளர் கடிதம்...  துறை ரீதியான தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. புத்தகங்கள் தட்டுப்பாட்டால் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  அதில், ""துறைகள் ரீதியான தேர்வுகளுக்கான புத்தகங்களில் துறை குறித்த விதிகள், நெறிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்டதாக உள்ளது. எனவே, இப்போதைய பாடத் திட்டத்தில் புதிய விதிகள், சட்டங்கள் சேர்க்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடுவது அவசியமாகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் துறை ரீதியான பாடத் திட்டத்தில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். நிலைமைக்குத் தகுந்தாற் போல விதிகள், சட்டங்களை அதில் கொண்டுவர வேண்டும். தேர்வுக்கான புத்தகங்களை தேவையான அளவு அச்சிட்டு தேர்வு எழுதுவோர் அனைவருக்கும் கிடைக்க அனைத்துத் துறைகளின் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ரமேஷ் சந்த் மீனா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதன்மூலம், துறை ரீதியான தேர்வுகளை எழுதுவோருக்கும், துறைகளின் விதிகளைத் தெரிந்து கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளதாக அரசுத் துறை ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.