டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பருவமழை தாமதம்: டெல்டாவில் நெல் வயல்கள் கருகும் அபாயம்

சென்னை, அக். 25:     பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:54 pm

வி.தேவதாசன்

சென்னை, அக். 25:     பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

  தமிழகத்தில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை பெய்யும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் ஆகியும் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை.

  மேட்டூர் அணையின் நீர் இருப்பும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 77 அடியாக இருந்தது. அதாவது, 39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

  தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 சதவீத நடவுப் பணிகள் மீதம் உள்ளன.

  இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். அதையும்கூட இப்போது நிலவுகிற வறட்சியால் அனைத்துப் பகுதி வயல்களுக்கும் சீராக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

  எனவே பருவமழை பெய்தால் மட்டுமே நெல் வயல்களைக் காப்பாற்ற முடியும் என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே, பருவமழையை எதிர்பார்த்து இன்னமும் காலதாமதம் செய்யாமல், பொதுப்பணித் துறையையும் கவனிக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி கூடுதல் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

  கர்நாடக அணைகளில் மொத்த கொள்ளளவில் இப்போது 92 சதவீத நீர் இருப்பு உள்ளது. எனினும் ஜூலை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 159.38 டி.எம்.சி. தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. இன்னும் 3 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.

  இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:

  தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே இப்போது சுமுக உறவு நிலவுகிறது. எனவே, இந்த நல்ல சூழலைப் பயன்படுத்தி தமிழக டெல்டா பகுதி நெல் வயல்களைக் காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து போதுமான அளவு தண்ணீரைப் பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி இப்போதே மேற்கொள்ள வேண்டும்.

  மேலும் விவசாய பம்ப்செட்டுகளுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, வறட்சியான இப்போதைய சூழலில் குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கினால்தான், பயிர்கள் காயாமல் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்றார் ரங்கநாதன்.

  கடந்த 2001 முதல் 2004 வரை நிலவிய கடும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகின. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

  பின்னர் 2005-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சியின் பாதிப்பு இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது.

  இந்த ஆண்டைப் பொருத்த வரை இதுவரை நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. வயல்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளன. ஆனால் இந்த நிலை தொடருமா? என்பது முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.