அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 மாத சம்பளம் பாக்கி
திருவொற்றியூர், ஏப்.21: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட வகுப்பு படித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்குரிய


திருவொற்றியூர், ஏப்.21: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட வகுப்பு படித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்குரிய சம்பளம் இன்று வரை வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த டாக்டர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மேற்படிப்பு படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மொத்தம் உள்ள இடங்களில் 50 சதவீதம் இந்த வகையில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த டாக்டர்களுக்கு சம்பளத்தை அரசே இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேற்படிப்பு முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் மீண்டும் இவர்கள் பணியாற்றுவார்கள். அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வகையில் இதுபோன்ற வசதிகளை அரசு வழங்கி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
2 மாத சம்பளம் பாக்கி: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,200 பேர் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை.
இது குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிக்கும் டாக்டர்கள் கூறியது:
நாங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காகவே இத்தகைய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு உயர்கல்வி படிக்கும்போதும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
அதனால்தான் சம்பளத்தையும் தொடர்ந்து அரசே வழங்கி வருகிறது. இதிலும் கடும் போட்டிக்களுக்கு இடையே திறமையானவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
எங்களில் பலர் குடும்பத்தோடு வீடுகளில் தங்கி படித்து வருகிறோம். சம்பளத்தை நம்பியே எங்களின் அன்றாட செலவினம் உள்ளது. சில மருத்துவக் கல்லூரிகளில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.விநாயகம் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் எவ்விதப் பயனும் இல்லை. மூன்றாவது மாதமான ஏப்ரல் முடிவடையும் நிலையில் சம்பளம் எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு சுகாதாரத் துறையில் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்கனவே செலவாகி விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே நடப்பாண்டு நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகுதான் சம்பளம் வழங்க முடியும் எனக் கூறுகின்றனர். எனவே முதல்வர் கருணாநிதி உடனடியாகத் தலையிட்டு சம்பளத்தை உரிய தேதியில் தொடர்ந்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நடைமுறை சிக்கல்களே காரணம்: இந்தப் பிரச்னை குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ் விநாயகம் கூறியது:
இரண்டு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாதது உண்மைதான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்கள் நீடிப்பதால் சம்பளம் உரிய நேரத்தில் வழங்க முடியவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலிருந்து வருகைப் பதிவு, சம்பள விவரங்கள் குறித்த அறிக்கை பெறப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சம்பளம் வழங்குவதில் சுணக்கம் ஏற்படுகிறது.
பணியாளர் பற்றாக்குறை போன்ற காரணங்கள் தாமதம் ஆவதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டாக்டர் விநாயகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...