ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்டுவளர்ச்சித் துறை அலட்சியத்தால் திணறும் விவசாயிகள்

ஆலங்குளம், ஏப். 22:     தமிழக பட்டுவளர்ச்சித் துறையின் அலட்சியப் போக்கால் தென்  மாவட்டங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் கடுமையான பிரச்னைகளை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  இந்தியாவில் பல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:37 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், ஏப். 22:     தமிழக பட்டுவளர்ச்சித் துறையின் அலட்சியப் போக்கால் தென்  மாவட்டங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் கடுமையான பிரச்னைகளை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் நடைபெற்று  வந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர்  உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிடும்படியாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி  செய்யப்படும் வெண்பட்டுகளில் 30 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்தில் உற்பத்தி  செய்யப்படுபவை.

 தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் இத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள்  பலர், பட்டுவளர்ச்சித் துறையின் அலட்சியப் போக்கால் தற்போது பெரிதும் சிரமம்  அடைகின்றனர்.

 பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயி, சிறிய அளவில் செய்வதாக  இருந்தால்கூட, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். புழு வளர்ப்பு  மனை அமைத்தல், வலை, தட்டுகள், ரேக், பவர் ஸ்பிரேயர் உள்ளிட்ட தளவாடப்  பொருள்கள், வயரிங், நடைமுறை மருந்துகள் உள்ளிட்ட தேவைகளுக்காக சுமார் 2  லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

 பட்டுவளர்ச்சித் துறையில் இருந்து களப் பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்  முட்டைகளைப் பெற்று, பின் பட்டு வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்கு  அரசு மானியம் உண்டு என கருதியே இந்த தொழிலில் தைரியமாக விவசாயிகள்  ஈடுபட்டு வந்தனர். ஆனால், நடைமுறையில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச்  சந்தித்து வருகின்றனர்.

 களப் பணியாளர்கள் மூலம் கிடைக்கும் முட்டைகள் தரமற்றவையாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள். காரணம், மாதந்தோறும் 2 ஆயிரம் முட்டைகள் விவசாயிகளுக்கு  கொடுத்தே ஆக வேண்டும் என்ற இலக்கு களப் பணியாளர்களுக்கு உண்டு என்பதால்,  தரமற்ற முட்டைகளாக இருந்தாலும் அவற்றை விவசாயிகள் தலையில் கட்டி விடுகின்றனர். இதனால் வளரும் புழுக்கள் ஆரோக்கியமற்றவையாக அமைகின்றன.

 இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, இளம்புழு வளர்க்கும் இடங்களில் சுமார் 7  நாள்கள் வளர்த்து தரப்படும் இளம்புழுக்களை, சுமார் 100 புழுக்களுக்கு ரூ.500  கொடுத்து வாங்குகின்றனர் விவசாயிகள்.

 இது ஒரு புறம் இருக்க, மல்பெரி நடவுக்கு, புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு,  சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கு, தளவாடப் பொருள்கள் வாங்குவதற்கு என  அரசு வழங்க வேண்டிய மானியங்கள் அனைத்தையும் சுமார் 3 ஆண்டுகள் வரை  இழுத்தடிப்பது, காலம் கடந்த பின் தளவாடப் பொருள்களை விநியோகிப்பது, கூடு  விற்பனை செய்ததற்கான தொகையை காலம் தாழ்த்தி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

 புழு வளர்க்கும் மனை அமைப்பதற்கு 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுவிடுவதால்,  இந்த மனைக்குள் வேறு எந்த தொழிலும் செய்ய முடியாது. ஒரு "கிராப்' வளர்க்க சுமார்  23 நாள்கள் வரை அதிலேயே முழு கவனம் செலுத்த வேண்டும். அதோடு 2 ஆள்கள்  வைத்து வேலைபார்க்கும்போது கூலியே சுமார் 6 ஆயிரம் வரை ஆகிறது. மேலும், ஏனைய  விவசாயப் பணிகள் பாதிப்பு என பல வகைகளில், விவசாயிகளுக்கு இழப்பு  ஏற்படுகிறது.

 உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை அரசு அங்காடிகளில் மட்டுமே விற்பனை  செய்ய முடியும் என்பதால், தருமபுரி, கோவை, வாணியம்பாடி, திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள தென்காசி (நன்னகரம்) ஆகிய இடங்களில் ஏதெனும் ஒன்றில்  மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

 பட்டுப் புழுக்கள் கூடுகட்டும்போது நாம் செலுத்தும் கவனத்தைப் பொருத்தும்,  கூடுகட்டப் பயன்படுத்தப்படும் படல்களைப் பொருத்தும்தான் கூடுகளின் நூற்புத் திறனும் தரமும் அதிகரிக்கின்றன. விவசாயிகளுக்கு அதிக அளவில் அறுவடை கிடைத்தாலும், நூற்புத் திறனற்ற கூடுகளாக இருப்பின் அங்காடியில் விலை குறைவாகவே  கிடைக்கும்.

 தரமான கூடாக இருந்தாலும், கூடு எடை போட்டு, சுமார் 15 நாள்கள் கழித்தே  அதற்கான தொகையை அங்காடியில் இருந்து பெற முடிகிறது. அதிலும் குறிப்பிட்ட  சதவீதம் லெவி தொகையாக வசூல் செய்யப்படுகிறது.

 பட்டு வளர்ச்சித் துறையால் வெளியிடப்படும் பட்டுமலர் என்ற புத்தகத்திற்கு  ஆண்டுச் சந்தாவாக ரூ.160 பெற்றுக் கொண்டும் இவர்களுக்கு தபாலில் இதுவரை  புத்தகம் வந்ததே இல்லையாம். ஆண்டில் ஏதாவது ஒரு மாதம் களப் பணியாளரே  நேரடியாக வந்து, ஏதாவது ஒரு மாதத்தில் உள்ள புத்தகத்தை தந்து செல்வது வழக்கமாக உள்ளது.

 இவ்வாறு பட்டுவளர்ச்சித் துறையின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டத்தில்,  அத்தியூத்து, நாலாங்குறிச்சி, குத்தபாஞ்சான், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தவர்கள், சிறிது சிறிதாக தொழிலை  நிறுத்தி வருகின்றனர்.

 தீர்வு என்ன?  இதற்குத் தீர்வாக பட்டுவளர்ச்சித் துறை சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 தரமான முட்டைகளை வழங்க வேண்டும். முட்டைகளின் தரத்தைப் பரிசோதித்து,  வாங்கிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். விற்பனை செய்த  கூடுகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

 தனியாரிடமும் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். வங்கிக் கடன் எளிதில் கிடைக்க வழி செய்ய வேண்டும். அரசு தளவாடப் பொருட்களை தாமதமாக வழங்குவதைத் தவிர்த்து, தொகையாக வழங்கினாலோ, வங்கிக் கடனில் வரவு வைத்தாலோ எளிதாக அமையும்.

 தென்காசி நன்னகரத்தில் அமைந்துள்ள அங்காடியில், சுமார் 120 கிலோ நூலாக்கும்  அளவிற்கு தறி வைத்துள்ளார்கள். ஆனால், இந்தப் பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு   ஆயிரம் கிலோவுக்கு மேல் உற்பத்தியாகிறது. அதற்கு ஈடுசெய்யும் வகையில் தறித் திறனை ஏற்படுத்த வேண்டும்.

 முழுக்க இத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளுக்கு அரசு  ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற பல்வேறு அடிப்படை சலுகைகளை வழங்க  வேண்டும். பட்டுக்கூடுகளுக்கு நிரந்தரமான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்திட  தமிழக அரசு, மத்திய பட்டு வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.