சென்னை, ஆக. 26: ஓயாத வாகன இரைச்சல்.. விரைந்து செல்லும் பரபரப்பில் காதைக் கிழிக்கும் ஹார்ன் சத்தம்...
இரவுச் சிற்றுண்டிக்காக அலைமோதும் அந்த ஹோட்டல் வாசலில் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தார் அந்த மாணவி.
கையிலே புத்தகம்.. பக்கத்தில் பூக்கூடை.
""பூ ரெண்டு முழம் கொடு பாப்பா'' என்று குரல் ஒலிக்க...
புத்தகத்தைப் பக்கத்தில் அப்படியே கவிழ்த்து வைத்துவிட்டு முழம் போடுகிறார். காசை வாங்கிக் கொண்டு மீண்டும் படிப்பு.
பூ விற்றுக் கொண்டே படிப்பா?
மாணவியை அணுகி விசாரித்தோம்...
குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது கல்விச் செலவுகளுக்காக ஹோட்டல் வாசலில் பூ விற்றுக் கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இந்த மாணவியின் பெயர் வி.கஸ்தூரி.
அமைந்தகரை சாந்தி காலனியைச் சேர்ந்த இவர், ஷெனாய் நகர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவருடைய தாய், அண்ணா நகரில் கோயில் ஒன்றின் வாசலில் பூ வியாபாரம் செய்து வருகிறார். தந்தை வாசு கொத்தனார். அண்ணன் அய்யனார் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, இரு சக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சகோதரி லட்சுமிக்குத் திருமணமாகி விட்டது. ஏழைக் குடும்பத்தில் கடைசிப் பெண்ணாக பிறந்த கஸ்தூரி, டாக்டராவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். "லட்சியத்தை நிச்சயம் அடைவேன்' என சற்றும் மனம் தளராமல் உறுதிபட கூறுகிறார்.
வீட்டிலிருந்தால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. "டிவி'யில் கவனம் செல்கிறது. பூ விற்பதன் மூலம் படிப்பிலும் கவனம் செலுத்த முடிகிறது என்று சொல்லும் கஸ்தூரி, 4-ம் வகுப்பு முதல் இதே இடத்தில் பூ விற்று வருகிறார்.
"பள்ளி முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு பூ விற்க வந்து விடுவேன். இரவு 10.30 மணிக்குதான் அண்ணனுடன் வீடு திரும்புவேன். அதுவரை பூ விற்றுக் கொண்டே வீட்டுப் பாடங்களை எழுதி முடிப்பதோடு, ஓரளவு பாடங்களையும் படித்து விடுவேன். வாகனங்களின் சப்தமும், மக்களின் நடமாட்டமும் பழகி விட்டதால், கவனம் சிதறுவதில்லை. படிப்பில் முழு கவனம் செலுத்த முடிகிறது.
பள்ளியில் நன்கு படிப்பேன். 10-ம் வகுப்பில் பள்ளித் தேர்வுகளில் 8-வது ரேங்க் வரை எடுத்து தேர்ச்சி பெற்றேன். ஆனால், பொதுத் தேர்வின்போது உடல் நிலை சரியில்லாமல் போனது. அடிக்கடி தலைவலி ஏற்பட்டது.
இதனால் இறுதி பொதுத் தேர்வில் 500-க்கு 340 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. லட்சியத்தை அடைவதற்காக, பிளஸ் டூவில் அறிவியல் பிரிவை எடுத்துள்ளேன்' என்கிறார் கஸ்தூரி.
ஆமாம், இவர் ஏன் பூ விற்க வேண்டும்? நம்மை அறியாமல் கேள்வி எழுகிறது.
"அதிக அளவில் ரெக்கார்டு நோட்டுகளும், கையேடுகளும் வாங்க வேண்டியுள்ளது. கையேடு ஒன்றின் விலை ரூ.200. பெற்றோருக்கு சுமை கொடுக்காமல், கையேடுகளை எனது வருமானத்தின் மூலம் வாங்க முயற்சி செய்து வருகிறேன்'.
பள்ளிச் சிறுமி ஒருவர் ஹோட்டல் வாசலில் பிளாட்பாரத்தில் பூ விற்பதை சமூகம் எப்படி பார்க்கிறது? இவருக்குத் தொந்தரவுகள் எதுவும் கிடையாதா?
"ஹோட்டல் வாசலில் தனியாக இருந்தபோதும், எந்தவித தொந்தரவும் எனக்கு இல்லை. மாறாக இங்கிருக்கும் ஆட்டோ டிரைவர்களும், கடைக்காரர்களும் மேலும் ஊக்கம் அளித்து வருகின்றனர்' என்கிறார் கஸ்தூரி.
பூக்களை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் அதைவிடச் சிறந்தது எதை வாங்கிவிட முடியும் என்றான் ஓர் அரபுக் கவிஞன்.
கஸ்தூரியிடம் அதற்கு பதில் இருக்கிறது. அவர் அந்தப் பணத்தில்தான் மருத்துவம் படிக்கும் லட்சியத்தை அடைய நினைக்கிறார்.
பூக்களை விற்று படிப்பை வாங்கும் கஸ்தூரிகள்... தெரு விளக்கில் படித்து உயர் நீதிமன்ற நீதிபதியான ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரை நினைவுபடுத்துகிறார்கள்.
அனைவருக்கும் கல்வி சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. வசதிக்கு ஏற்ற கல்வி என்பது மட்டும் தொடர்கிறதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


