குறைந்து வரும் வெண்டைச் சாகுபடி
ஆலங்குளம் : போதிய விலையின்மை,கூலி, ஆள் பற்றாக்குறை, பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் விலைஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆலங்குளம் பகுதியில் வெண்டைச் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. ஆலங்குள


ஆலங்குளம் : போதிய விலையின்மை,கூலி, ஆள் பற்றாக்குறை, பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் விலைஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆலங்குளம் பகுதியில் வெண்டைச் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.
ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்தரி,வெண்டை,தக்காளி, மிளகாய், பெல்லாரி வெங்காயம் உள்ளிட்ட காய்கனிகள் அதிகளவில் பயிரிடப்படுவதுண்டு. ஆனால் அண்மைக் காலமாக வெண்டை பயிரிடுதலை பெரும்பாலான விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்,வெண்டை உற்பத்தி செய்வதில் உள்ள பிரச்னைகள் மற்றும் உரிய விலையின்மை ஆகியவையே முக்கியமானவை.
இது குறித்து வெண்டை பயிரிட்டுள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:
வெண்டை பயிரிடுவதற்கு தேவையான,வீரிய ஒட்டு விதைகளுக்காக கிலோ |1000 முதல் | 1200 வரை செலவிடப்படுகிறது. ஆனால் இத்தகைய விதைகளைப் பயிரிடும்போது மஞ்சள் தேமல் நோயால் பாதிப்பு ஏற்பட்டு, காய்கள் வெள்ளை நிறமாக மாறிவிடும். இதைத் தவிர்க்க,மஞ்சள் தேமல் நோய் (வஙய) தாக்காமல் இருக்கக் கூடிய விலைஉயர்ந்த வீரிய ஒட்டுவிதைகளை கிலோ | 2000 லிருந்து | 2400 வரை வாங்கிப் பயிரிடுகிறோம். ஒரு ஏக்கர் வெண்டை பயிரிட சுமார் 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும்.
வெண்டை தனிப் பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிடப்படுகிறது. பயிரிட்ட நாளிலிருந்து 30-வது நாள், 45-வது நாள், 60-வது நாள் என 15 நாள்களுக்கு ஒருமுறை பல்வேறு வகையான இலைவழி உரங்கள் இடவேண்டும். அதோடு,சாறு உறிஞ்சும் பூச்சிகள்,தண்டு துளைப்பான்,காய்ப் புழு,வெள்ளை கொசு போன்றவற்றைக் கட்டுப்படுத்த, நோய்க்கு தகுந்தவாறு மருந்துகளும் அவ்வப்போது தெளிக்க வேண்டும். இதை சரியாகப் பராமரித்தால் மட்டுமே,தரமான வெண்டை கிடைக்கும்.
இதில் நல்ல மகசூல் கிடைத்தால் மட்டும் போதாது. பறிக்க கூலி ஆள்கள் கிடைப்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. வெண்டை என்றாலே வர பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், பறிக்கும் நபர்களின் கைகளில் சிறிது நேரத்திலேயே ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிடும். கையுறைப் போட்டு பறித்தாலுமே ரத்தம் வரும். இதுதவிர பலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. வெயில் அதிகரிக்க அதிகரிக்க அதிகளவில் அரிப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால்தான் கூடுதல் கூலி கொடுத்தாலும்கூட, வெண்டை பறிப்பதற்கு ஆள்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இவ்வாறு சிரமப்பட்டு விளைவித்த வெண்டையை,சந்தைக்குக் கொண்டு செல்லும் போது,அங்கு வியாபாரிகளால் சில நேரங்கள் தவிர பல நேரங்களில் மிக குறைந்த விலைக்கே வாங்கப்படுகிறது.
சாதாரணமாக ஒரு விவசாயி வெண்டை பயிரிட்டு சந்தைவரை கொண்டு வந்து சேர்க்க ஆகும் செலவு கிலோவுக்கு | 5 ஆகி விடும். அதற்கு மேல் விலை வைத்தால் மட்டுமே விவசாயி லாபத்தைப் பார்க்க முடியும்.
அண்மைக்காலமாக ஆலங்குளம் பகுதியில் வெண்டை கிலோ | 5-க்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளின் 2 மாத கால உழைப்பு விரயமாகிறது. மூலதனம் இல்லாமல் கடன் வாங்கி தொழில் செய்யும் விவசாயிகள் நிலை வட்டி கொடுப்பதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது.
| 5-க்கு வெண்டைக்காய் வாங்கும் மொத்த வியாபாரிகளோ, சில மணி நேரத்திலேயே | 10-க்கு விற்பனை செய்துவிடுகின்றனர். இதன்மூலம் அவர்கள் கிலோவுக்கு | 5 லாபம் பார்த்து விடுகின்றனர். மாதக்கணக்கில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து விளைபொருளை சந்தைக்குக் கொண்டு வரும் விவசாயிகள், பல நேரங்களில் நஷ்டமே அடைகிறோம் என்றனர் அவர்கள்.
வெண்டையை கிலோவுக்கு குறைந்தது |10- க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு அது லாபமாக இருக்கும். வெண்டை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்வமும் ஏற்படும். இல்லையெனில் வருங்காலங்களில் இச் சாகுபடி ஆலங்குளம் பகுதியில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு வியாபாரிகள் மட்டுமன்றி, அரசும், குறைந்த விலையில் அதிக வீரியமுள்ள தரமான விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகியன வழங்கினால் இத் தொழில் செய்ய விரும்பும் விவசாயிகளின் சோர்வு நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...