/

தனியார் கல்லூரிகளில் ஆய்வு பலன் தருமா?

சென்னை: தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு, கல்லூரிகளை கண்காணிக்கும் பொறுப்பை தமிழக அரசு அளித்திருப்பது குறித்து மூத்த கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் கல்லூரி நிர

Updated On :20 செப்டம்பர் 2012, 9:02 am

சென்னை: தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு, கல்லூரிகளை கண்காணிக்கும் பொறுப்பை தமிழக அரசு அளித்திருப்பது குறித்து மூத்த கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க துணை போகக்கூடும் என அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உயர் கல்வி மன்றம் மற்றும் தொழில்நுட்ப கல்வி மன்றங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் உயர் கல்வி மன்றம் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்து அதை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை ஆராய்ந்து, அதை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பது, அதிக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் பொறியியல் கல்லூரிகள் குறித்த புகார்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட கல்லூரிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது.

இந்த மன்றங்களின் முக்கிய பொறுப்புகளில் ஓய்வுபெற்ற மூத்த கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளில் ஆலோசகர்களாக இப்போதும் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்ற நபர்களை எப்படி தனியார் கல்லூரிகளை கண்காணிக்கும் பொறுப்பில் தமிழக அரசு நியமித்துள்ளது என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து மூத்த கல்வியாளர் ஒருவர் கூறியது:

""சம்பந்தப்பட்ட நபர்கள் இப்போது தனியார் கல்லூரியில் ஆலோசகராக இருப்பதோடு மட்டும் அல்லாமல், இதற்கு முன்னரும் சில தனியார் கல்லூரிகளில் ஆலோசகர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

இதுபோன்ற நபர்களிடம், அவர்கள் பணிபுரிந்த மற்றும் பணிபுரிந்து வரும் கல்லூரிகள் குறித்து புகார்கள் வரும்போது, உரிய நடவடிக்கையை அவர்களால் எப்படி மேற்கொள்ள முடியும்?

அவ்வாறு ஆய்வு செய்தாலும், அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகளுக்கு சாதகமான முடிவுகளையே அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பர். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, கல்லூரிகளின் தரத்திலோ, கல்வியின் தரத்திலோ எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எந்தவித தடையுமின்றி அதிக கட்டண வசூலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அதிக கட்டண வசூல் தொடர்பாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதுவரை அந்தக் கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவது, கல்லூரிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமே மேற்கொள்ள முடியும். எனவே, உள்நோக்கத்துடன் வேறு சில காரணங்களுக்காகவே இதுபோன்ற கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.