9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காவிரி டெல்டா மாவட்டங்களில் அழியும் வாழ்வாதாரம்

சீர்காழி  : காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவரச் செய்யப்படாததால், முக்கிய வாழ்வாதாரமான விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் க

Updated On :20 செப்டம்பர் 2012, 2:56 pm IST

சீர்காழி  : காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவரச் செய்யப்படாததால், முக்கிய வாழ்வாதாரமான விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அடைமழை பெய்வது வழக்கமான ஒன்று. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பொழுது பெய்யும் மழையைவிட பல மடங்கு மழை பெய்துள்ளது. ஆனால், அப்போது இவ்வளவு சேதமும், அழிவும் ஏற்படவில்லை.

அப்போது வடிகால்கள் சரியாக இருந்ததே இதற்குக் காரணம். கிராம மக்களாலேயே வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. ஆடி மாதம் நடவு செய்து, தை மாதம் அறுவடை செய்யப்பட்டதால், முதிர்ந்த பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.

ஆனால், இன்று காலம் தவறி நடவு செய்ய வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில், சாகுபடி செய்து மழை வெள்ளத்தால் நஷ்டப்பட வேண்டியுள்ளது. அரசு ஜூன் மாதம் திறந்துவிடும் மேட்டூர் நீர் கடைமடைப் பகுதிக்கு ஜூன் மாதத்திலேயே வந்து சேர்ந்திருந்தால், கடைமடைப் பகுதிகளுக்கு அழிவு ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும்.

ஆனால், மேட்டூர் அணை திறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பொதுப் பணித் துறை கடைமடைப் பகுதி குறித்து சிந்திப்பதுகூடக் கிடையாது. அதேபோல, ஆண்டுதோறும் ஏற்படும் மழை வெள்ளம் குறித்து சிந்திப்பதில்லை.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிளைச் சாலைகள், தெரு விளக்குகள் போன்றவற்றைப் பராமரிப்பது போல ஆறுகள், முதன்மை வாய்க்கால்கள், ஏரிகள், கிளை வாய்க்கால்களை பொதுப் பணித் துறை பராமரிப்பது இல்லை.

காவிரி ஆறு மயிலாடுதுறைக்கு கிழக்கே ஆடு தாண்டும் ஆறாகக் குறுகியும், கரை தெரியாத அளவிற்கு நெய்வேலி காட்டாமணக்கு செடிகளால் சூழப்பட்டும் உள்ளது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் வருவது கிடையாது. வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடிவதும் இல்லை. தூர் வாரி பல ஆண்டுகள் ஆகின்றன.

இதைச் சரிசெய்ய பொதுப் பணித் துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உற்பத்தியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், கடைமடைப் பகுதி நீர்ப்பாசன முன்னோடி விவசாயியுமான சீர்காழி எம்பாவை எஸ். யோகநாதன் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் அழிவு ஏற்படுவது வடிகால் இல்லாததால்தான். அரசு நெடுஞ்சாலைகளை உயர்த்தி உள்ளது. சாலை ஓரமாக பொதுமக்கள் வீடுகளைக் கட்டி மதில்சுவரை எழுப்பி உள்ளனர். கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணை, அனல் மின் நிலையம் இயக்கப்படுகின்றன. சுலபமாக வடிந்த தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.

இவற்றை பொதுப் பணித் துறையினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்ய வேண்டும். நாட்டின் முக்கியத் தேவையான உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களின் நன்மையைக் கருதியும் ஆண்டுதோறும் ஏ.சேனல், பி.சேனல் ஆறுகள், முதன்மை வாய்க்கால், இரண்டாம் நிலை வாய்க்கால், கிளை வாய்க்கால்களைப் பராமரிக்கும் வகையில் அவற்றைக் கண்டிப்பாக அரசு தூர்வார வேண்டும்.

ரெகுலேட்டர்களை பராமரிக்க வேண்டும். பல இடங்களில் ரெகுலேட்டர்களில் தடுப்புப் பலகைகள் இல்லை. இதனால், தண்ணீர் வீணாகிறது. ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களைப் பராமரிக்கும் வகையில், அவற்றின் கரைகளில் பயனுள்ள மரங்களை வளர்க்க வேண்டும். முதன்மை வாய்க்கால் கரைகளை அகலப்படுத்தி, அதிகாரிகள் நேரடியாக வாய்க்கால் கரை வழியாகச் சென்று பார்வையிடும் வகையில் கரைகளை முறைப்படுத்த வேண்டும்.

கரைகளைப் பாதுகாக்கும் லஸ்கர் பணியிடம் பல இடங்களில் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அவர்களுக்கு தொலைபேசி வசதியுடன் இருந்த குடியிருப்பு தற்போது இடிந்து கிடக்கிறது. இதைச் சீரமைத்துத் தர வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளைக் கொண்ட பாசனக் குழு அமைக்க வேண்டும். மேட்டூர் அணை திறந்து நான்காம் நாள் கல்லணைக்கும், அதிலிருந்து மூன்றாவது நாள் கடைமடைப் பகுதியான பூம்புகாருக்கும் தண்ணீர் வருவது வழக்கம். மீண்டும் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 முறையாவது பாசனக் குழுக்களைக் கூட்டி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தலைமைப் பொறியாளர்கள் (பாசனத் துறை) தலைமையில் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

பெருகி வரும் மக்கள்தொகை, வாகனங்களைக் கருத்தில் கொண்டு, புறவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை போன்றவற்றைப் பராமரிக்கும் அரசு, விவசாயிகளின் துயரங்களைப் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் யோகநாதன்.

தமிழக அரசு கடைமடைப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, வெள்ளக் காலங்களில் பயிர்கள் பாதிக்காத வகையில் ஆறு, வாய்க்கால்களைத் தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்தி, வடிகால்களைச் சீரமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.